இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் 5ம் தேதி தக்லைஃப் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனங்களும் இணைந்து தயாரித்திருக்கின்றன.
நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் கடந்தாண்டில் சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 325 கோடி வசூலை குவித்தது. இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ. 70 கோடியாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
அதே போல் இந்த ஆண்டிலும் தக்லைஃப் படம் கமலுக்கு மிகப்பெரிய வசூலை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 37 ஆண்டுகளுக்கு பின் நடிகர் கமல், இயக்குனர் மணிரத்னத்துடன் கைகோர்த்து இருக்கிறார். மேலும் நடிகர் சிம்பு கமலுடன் இணைந்து முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் நடிகைகள் திரிஷா அபிராமி நடிகர் அசோக் செல்வன் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அதனால் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது என்று நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்துள்ளது. கர்நாடகா வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, இந்த விஷயத்தில் கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று எச்சரித்திருக்கிறார்.
இந்த சூழலில் நடிகர் கமல்ஹாசன், அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது. தமிழில் இருந்து கன்னடம் மொழி பிறந்தது குறித்து அறிஞர்கள் ஏற்கனவே கூறியிருக்கின்றனர். அரசியல்வாதிகளுக்கு இதுபற்றி பேசக்கூடாது என்றும் தெரிவித்துவிட்டார். மேலும், கர்நாடகாவில் தக்லைஃப் படம் ரிலீஸ் ஆகாவிட்டால் ரூ. 20 கோடி இழப்பு ஏற்படும் என்ற நிலையில், இழப்பு ஏற்பட்டால் பரவாயில்லை. ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையை உச்சரிக்க மறுத்து, ரூ. 20 கோடி இழப்பை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திய கமல்ஹாசனை, தன்மான சிங்கம் என்று அவரது ரசிகர்கள் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.





