தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜீத்குமார். அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் துணிவு. கடந்த 2023ம் ஆண்டில் ஜனவரி 14ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. இந்த படத்தை அஜீத்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய எச் வினோத் இயக்கி இருந்தார்.
துணிவு படம் வெளியான போது விஜய் நடித்த வாரிசு படம் வெளியானது. அதன்பிறகு விஜய் நடித்த லியோ, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற 2 படங்கள் ரிலீஸான நிலையில், இப்போது அவரது நடிப்பில் தளபதி 69 படப்பிடிப்பும் வேகமாக போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் 2 ஆண்டுகளாக அஜீத் படம் எதுவும் வெளிவராததால் அவரது ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
இந்த சூழலில் அஜீத்குமார் நடித்து வரும் விடாமுயற்சி, குட் பேட் அக்லி 2 படங்களும் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பில் ஏகே ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். முதலில் குட் பேட் அக்லி வருமா, அல்லது விடாமுயற்சி படம் வருமா என்ற சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. வருகிற மே 1ம் தேதி, குட்பேட் அக்லி வெளியாகும் என்று முதலில் தகவல் வெளியானது.
ஆனால் இப்போது வருகிற பொங்கலுக்கு 2025ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி குட்பேட் அக்லி படத்தை ரிலீஸ் செய்துவிடும் முடிவில் படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் முடிவு செய்துள்ளனர். பல்கேரியாவில் இப்போது குட்பேட் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதன்பிறகு ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.
இன்னும் 7 நாட்களில் குட்பேட் அக்லி ஷூட்டிங் முடிவடைய உள்ள நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் வெளிநாட்டில் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். அவரது அப்பா, அசோசியேட் டைரக்டராக சென்னையில் அந்த படத்தின் டப்பிங் உள்ளிட்ட புரடக்சன்ஸ் பணிகளை தீவிரமாக கவனித்து பணியாற்றி வருகிறார்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் குட்பேட் அக்லி ஷூட்டிங்கில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், படத்தின் பாதி வரை டப்பிங் உள்ளிட்ட பணிகளை சென்னையில் அவரது தந்தை பக்காவாக முடித்திருக்கிறார். மீதி படப்பிடிப்பும் ஒரு வாரத்துக்குள் முடிவடைய உள்ளதால் வரும் பொங்கலுக்குள் படத்தை ரிலீஸ் பண்ணி விடும் முயற்சியில் படக்குழுவினர் உள்ளனர். எனினும் டிசம்பர் மாதம்தான் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் எனத் தெரிய வருகிறது.





