தமிழ் சினிமாவில் பிரபல பாடல் ஆசிரியராக இருப்பவர் கவிஞர் சினேகன். பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர். ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் மனசுக்குள்ளே தாகம் வந்தல்லோ தோழா தோழா கனவு தோழா என பல பாடல்களை எழுதி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார்.
விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்துக்கொண்டு பார்வையாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை கவனத்தை பெற்றவர் சினேகன். பிக்பாஸ் போட்டியின் இறுதியில் டைட்டில் வின்னராக ஆரவ் அறிவிக்கப்பட சினேகன் ரன்னராக 2ம் இடத்தில் இருந்தார். கமல்ஹாசன் மீது கொண்ட பேரன்பால் பல ஆண்டுகளாக மக்கள் நீதிமய்யம் கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.
கவிஞர் சினேகன் சினிமாவில் பாடல் எழுதுவது மட்டுமின்றி மக்கள் நீதிமய்யம் கட்சியில் முக்கிய செயல்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். கட்சியில் உறுப்பினராக உள்ள அவர், கட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு முக்கிய ஏற்பாட்டாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021ம் ஆண்டில் டிவி சீரியல் நடிகை கன்னிகாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். சில தினங்களுக்கு முன் இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அமெரிக்காவில் 4 மாதங்களாக இருந்த நடிகர் கமல்ஹாசன் சில வாரங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார்.
இந்நிலையில் காதலர் தினமான நேற்று நடிகர் கமல்ஹாசனை, தனது பெண் குழந்தைகளுடன் சினேகன் – கன்னிகா தம்பதி சந்தித்துள்ளனர். அப்போது நடிகர் கமல்ஹாசன், சினேகனின் பெண் குழந்தைகளுக்கு காதல், கவிதை என பெயர்களை சூட்டியிருக்கிறார். அப்போது குழந்தைகளின் கைகளில் தங்க வளையல்களும் அணிவித்திருக்கிறார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கமல்ஹாசன் சந்திப்பு புகைப்படங்களை பதிவிட்டுள்ள கவிஞர் சினேகன், காதலர் தினத்தில் எங்கள் தங்க மகள்களுக்கு தங்க வளையல்களுடன் காதல் என்ற பெயரையும் கவிதை என்ற பெயரையும் அணிவித்து வாழ்த்திய நம்மவர் எங்களின் அன்பு தலைவர் பத்மபூஷன் கமல்ஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள், என சினேகன் தெரிவித்துள்ளார்.





