கமல்ஹாசனும் ரஜினிகாந்த்தும் வணிக ரீதியாக போட்டி நடிகர்களாக இருந்தாலும் அவர்களுக்கிடையே உள்ள நட்பு அளப்பறியது. 1970, 80களில் கிட்டத்தட்ட 16 திரைப்படங்களுக்கு மேல் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனர். ரஜினிகாந்த் முதன் முதலில் சினிமாவிற்கு அறிமுகமான “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் கதாநாயகனே கமல்ஹாசன்தான். இவ்வாறு “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தில் இருந்தே இருவரும் நெருங்கி பழகத் தொடங்கினார்கள்.

அதன் பின் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த இருவரும் ஒரு கட்டத்தில் “இனி தனி தனியாக படம் நடிக்கலாம்” என்று முடிவு செய்து தனி தனியாக படம் நடிக்கத் தொடங்கினார்கள். இருவருமே மாபெரும் உச்சத்தை அடைந்தனர். ஒரு பக்கம் ரஜினிகாந்த் ஸ்டைல், ஆக்சன் என கலக்க, மறுபக்கம் கமல்ஹாசன் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் இருவரும் தனி தனியாக நடிக்கத் தொடங்கிய பிறகும் கூட இருவருக்குமான நட்பு குறையவில்லை. பல தருணங்களில் கமல்ஹாசன் ரஜினிகாந்துக்கு உதவியிருக்கிறார். இதனை ரஜினியே பல மேடைகளில் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகரான ஸ்ரீனிவாஸ், தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை குறித்து ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது ஒரு முறை ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் சில மாறுதல்கள் செய்ததால் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் ஒரு அபார்ட்மென்ட்டில் ஒரு ஃபிளாட் எடுத்து தற்காலிகமாக தங்கியிருந்தாராம்.

அந்த அபார்ட்மென்ட்டில் பாடகர் ஸ்ரீனிவாஸும் தங்கியிருந்தாராம். அந்த சமயத்தில் ஒரு நாள் ஸ்ரீனிவாஸ் தனது குடும்பத்தினருடன் ரஜினியை சென்று சந்தித்துள்ளார். அப்போது ஸ்ரீனிவாஸ் “முள்ளும் மலரும்” திரைப்படத்தில் ஒரு காட்சியை குறிப்பிட்டு, “அதில் ஒரே டேக்கில் நடித்தீர்களா?” என்று கேட்டாராம்.

அதற்கு ரஜினிகாந்த் சிரித்தபடியே, “நான் என்ன கமல்ஹாசனா? ஒரே டேக்கில் நடிப்பதற்கு. கமல்தான் நடிகர். நான் எனக்கு தெரிந்த ஸ்டைலில் படம் நடித்து சம்பாதிப்பதற்காகவே வந்தேன். ஆனால் கமல் எப்பேர்பட்ட காட்சியாக இருந்தாலும் ஒரே டேக்கில் நடித்து அசால்ட்டு காட்டுவார். அவர் ரேஞ்சுக்கு எல்லாம் என்னால் நடிக்க முடியாது” என்று கூறுவாராம்.





