தசாவதாரம் திரைப்படத்திற்கு பிறகு கமலஹாசனின் வெற்றி திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர் ஒவ்வொரு ஆண்டுக்கும் இடைவெளி விட்டு ஒரு திரைப்படத்தை கொடுத்தாலும், அது பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. உதாரணத்திற்கு உன்னை போல் ஒருவன் திரைப்படத்தை கூறலாம். விமர்சன ரீதியாக அந்த திரைப்படம் வரவேற்பை பெற்றாலும், திரையரங்குகளில் அது கலெக்சன் ஆகவில்லை.
இதேபோல் கமல்ஹாசன் நடித்து 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த மன்மதன் அன்பு திரைப்படமும் விமர்சன ரீதியாக சரிவை சந்தித்தது. இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பல சவால்களை சந்தித்து வெளியான அந்த திரைப்படத்தின் வெற்றி, கமலை உற்சாகப்படுத்தியது.
ஆனால் அதற்கு அடுத்து வெளியான உத்தம வில்லன் மற்றும் தூங்காவனம் என இரண்டு திரைப்படங்களும் தோல்வியை சந்தித்தன. இந்த சமயத்தில் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது பாபநாசம். மலையாளத்தில் திரிஷ்யம் திரைப்படத்தை ரீமேக் செய்து எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது.
நெல்லைக்கே உண்டான தமிழில் பேசிய கமல்ஹாசன், நடிப்பில் புது அத்தியாயத்தை செலுத்தினார். ஆனால் இதன் பிறகு கமல்ஹாசனுக்கு பெரிய படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால் திரைத்துறையை விட்டு விலகியே இருந்த அவர் தனியார் தொலைக்காட்சியில் வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார். இந்த நிகழ்ச்சி கமலுக்கு நல்ல பெயரை தான் பெற்றுக் கொடுத்தது.
இந்த சூழலில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனுக்கு வெளியான விக்ரம் திரைப்படம், மெகா ஹிட் வெற்றியை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த அந்த திரைப்படம், வசூலில் சக்கை போடு போட உலகநாயகன் மகிழ்ச்சி அடைந்தார். அந்தப் படத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்களுக்கு, விலை உயர்ந்த பொருட்களை பரிசளித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. அந்தப் படத்திற்கு ரசிகர்கள் தங்கள் வரவேற்பை கொடுக்க தவறியதால், திரையரங்குகளில் மிக குறைந்த நாட்கள் மட்டுமே அந்த திரைப்படம் ஓடியது. இந்த நிலையில் தனது அடுத்த திரைப்படத்திற்கான பணியில் இறங்கி இருக்கிறார் கமல்ஹாசன். சண்டை பயிற்சியாளர்களும் சகோதரர்களான அன்பறிவ் மாஸ்டர்கள், இயக்குனராக அவதாரம் எடுக்க அதில் தான் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இதற்கான சூட்டிங், வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இது கமலுக்கு மீண்டும் ஒரு வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம் என சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.





