நடிகர் ராகவா லாரன்ஸ் ஆரம்பத்தில் டான்ஸ் மாஸ்டராக இருந்தவர். பிறகு ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக திகில் திரில்லர் கதைக்களத்தில் உருவான முனி படம் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது. இந்த படத்தில் நடிகர் ராஜ்கிரணும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
அதன்பிறகு ராகவா லாரன்ஸ் அதே வரிசையில் காஞ்சனா காஞ்சனா 2 காஞ்சனா 3 ஆகிய படங்களை இயக்கி நடித்தார். காமெடி காதல் சென்டிமென்ட் திகில் திரில்லர் படங்களாக இருந்த காஞ்சனா பேய் சீரிஸ் படங்களுக்கு ரசிகா்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது.
இந்நிலையில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4 படத்தை இயக்கி அவரே நாயகனாக நடித்து வருகிறார். மற்ற காஞ்சனா படங்களில் அவரே பேய் கேரக்டரில் நடித்த நிலையில் காஞ்சனா 4 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே அந்த கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் காஞ்சனா 4 படப்பிடிப்பு நடந்த நிலையில் ஐதராபாத்திலும் அதையடுத்து மும்பையில் ஒரு மாதமும் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்க ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் பல வாரங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 40 சதவீத படப்பிடிப்பு மட்டுமே நடந்துள்ளது.
இதற்கிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் நிவின் பாலி மாதவன் மற்றும் லப்பர் பந்து நாயகன் ஹரீஷ் கல்யாண் ஆகியோரும் இணைந்து நடிப்பதால் மல்டி ஸ்டார்ஸ் படமாக பென்ஸ் உருவாகிறது.
இந்த படப்பிடிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் பிஸியாக இருப்பதால்தான், காஞ்சனா 4 படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டனர். பென்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்கிய பிறகு, காஞ்சனா 4 படப்பிடிப்பை மீண்டும் ராகவா லாரன்ஸ் துவங்க இருக்கிறார். அடுத்தகட்டமாக புதுச்சேரியில் காஞ்சனா 4 படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





