தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ரஜினிகாந்த் 73 வயதிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். ஒரு படத்தில் நடிக்க ரூ. 150 கோடி சம்பளம் வாங்குகிறார். இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
ஜெய்பீம் இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம், கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். அமிதாப் பச்சன் பகத் பாசில் ராணா டகுபதி துஷாரா விஜயன் மஞ்சு வாரியார் ரித்திகாசிங் ரோகினி அபிராமி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கு லாபத்தையும் கொடுத்தது.
இந்நிலையில் வேட்டையன் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. என்கவுண்டர் மற்றும் கல்வி வியாபாரத்தை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவான இந்த படம், சிறந்த கதையம்சம் கொண்டதாக இருந்ததாக பாராட்டப்பட்டது. எனினும் ரஜினியின் வழக்கமான கமர்சியல் படமாக இல்லை என்ற ஏமாற்றமும் ரசிகர்களுக்கு இருந்தது.
எனினும் ஓடிடி தளத்தில் சிறப்பான கதையம்சம் கொண்ட படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த ஒரு வரவேற்பு இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள வேட்டையன் படத்திற்கு நிச்சயமாக கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியான வேட்டையன் படம் 4 வாரங்களில் ஓ டி டி தளத்தில் வெளியாகிவிட்டது. ஆனால் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்து கடந்த பிப்ரவரி 9ம் தேதி வெளியான லால் சலாம் படம் 9 மாதங்களாகியும் இன்னும் ஓடிடி தளத்தில் வெளியாகவில்லை. செப்டம்பர் மாதமே இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது.
லால் சலாம் படப்பிடிப்பு நடந்தபோது, ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதாகவும், பிறகு காட்சிகளை தேடி எடுத்து விட்டதாகவும் அவற்றுடன் சேர்த்து புதியதாக எடிட் செய்யப்பட்ட படமாக ஓடிடியில் லால் சலாம் படம் வெளியாகும் என்று படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். ஆனால் அதன் பிறகும் லால் சலாம் படம் ஓடிடி தளத்தில் இதுவரை வெளியாகாதது ரஜினி ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.





