ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியால் எப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உற்சாகமாக இருக்கிறாரோ, அதேபோன்றுதான் உலகநாயகன் கமல்ஹாசனும் விக்ரம் திரைப்படத்திலிருந்து புதிய பார்முலாவை கையில் எடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம், கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுக்க, புதிய திரைப்படங்களை தயாரிப்பதில் அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.
தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு ஆகிய இரண்டு திரைப்படங்களை தனது ராஜ்கமல் நிறுவனம் மூலம் அவர் தயாரிக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ராஜ்குமார் பெரியசாமி எடுக்க, அதன் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிவடைந்தது.
இதேபோல், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை எடுத்த பெரியசாமி சிம்புவை வைத்து இயக்க உள்ளார். இதற்கான ப்ரீ புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படம் தயாரிப்பது மட்டுமல்லாமல், நடிப்பதிலும் கமல்ஹாசன் ஆர்வம் காட்டி வருகிறார். சங்கர் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்த நிலையில் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால், அதனையே இரண்டு பாகங்களாக எடுக்க சங்கர் திட்டமிட்டுள்ளார். மூன்றாம் பாகத்திற்காக மட்டும் கமல்ஹாசன் 40 நாட்கள் கால் சீட் கொடுத்துள்ளாராம். இந்தப் படத்தைத் தொடர்ந்து, எச் வினோத் மற்றும் மணிரத்னம் ஆகியோரின் திரைப்படங்களில் கமல்ஹாசன் நடிக்கிறார்.
இதில் முதலில் எச். வினோத் படத்திற்கான பணிகள் தொடங்குகிறது. ராணுவ பின்னணியுடன் ஆக்சன் திரில்லர் ஜானரில் இந்த திரைப்படம் உருவாகிறது. இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஏற்கனவே கமல்ஹாசன் தனது இயக்கத்தில் தலைவன் இருக்கிறான் திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டார். ஆனால் பல்வேறு காரணங்களால் அது நடக்காமல் போனது.
இந்த நிலையில் அந்த கதையைதான் வினோத்திடம் அவர் கூறி இருப்பதாகவும், அதனையே அவர் திரைப்படமாக எடுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் படத்தில் எப்படி கன்னட மலையாள திரைப் பிரபலங்கள் நடித்தார்களோ, அதே போல் இந்த படத்திலும் முக்கிய நட்சத்திரங்கள் இடம் பெற வைக்க பட குழு முயற்சி செய்து வருகிறதாம். இதில் முதலாவதாக கன்னட நடிகர் சிவராஜ்குமாரை கமல்ஹாசன் புக் செய்திருக்கிறாராம். இன்னும் பல பிரபலங்கள் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், அதன் அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.





