நடிகர் கார்த்தி, இயக்குனர் அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படம் மூலம் அறிமுகமானார். முதல் படமே மாஸ் ஹிட் படமாக வெற்றி பெற்றதால் தொடர்ந்து 17 ஆண்டுகளில் 25 படங்கள் வரை நடித்துவிட்டார். அவரது 25வது படம்தான் ஜப்பான். குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜூ முருகன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்பட்ட சிறந்த படங்களாக குக்கூ, ஜோக்கர் படங்கள் இருந்தன. கண் பார்வையற்ற காதலர்களின் மெல்லிய உணர்வுகளை குக்கூ படத்திலும், சமூக அவலங்களை கேள்வி கேட்கும் மனநலம் பாதித்த மக்கள் ஜனாதிபதி கதாபாத்திரத்தையும் திரையில் காட்டி அசத்தியிருந்தார்.
அதனால் அவரது டைரக்ஷனில் உருவான ஜப்பான் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதுவும் கார்த்தியின் 25வது படம் என்பதால், அவரது ரசிகர்களும் மிகுந்த ஆர்வம் காட்டினர். ஆனால் கடந்த தீபாவளியன்று வெளியான இந்த படம் மிக மோசமான படமாக அமைந்தது. படம் பார்க்க வந்தவர்கள், இடைவேளையுடன் தெறித்து வெளியே ஓடினர்.
இந்த படத்துடன் தீபாவளிக்கு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் மிகப்பெரிய வசூலை பெற்றது. அதற்கு முக்கிய காரணம், ஜப்பான் படம் பார்க்க வந்த பெரும்பாலான ரசிகர் கூட்டம், கடைசி நேரத்தில் திடீரென மனதை மாற்றிக்கொண்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பார்க்கச் சென்றனர். இதனால் இந்த படத்தின் அபார வசூலுக்கு ஜப்பான் கைகொடுத்தது.
இந்நிலையில் ஜப்பான் படத்தின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் கார்த்தி தான் என, அந்த படத்தில் நடித்த எழுத்தாளர் பவா செல்லத்துரை கூறியிருக்கிறார். ஜப்பான் படம் நன்றாக ஓடவேண்டிய படம்தான். ஆனால் ஓடாததால் வருத்தமடைகிறேன். இந்த படம் ஹீரோவின் கையில் இல்லாமல், டைரக்டர் கையில் இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். இன்றைய படங்களில் நடிகர்கள் தலையீடு, தயாரிப்பாளர் தலையீடு அதிகமாக இருக்கிறது. இப்படி ஒவ்வொருவரும் கதையை மாற்றினால், டைரக்டர் நினைத்தபடி படம் வராது, அதுதான் ஜப்பான் படம் தோல்வியடைந்தது என்று கூறியிருக்கிறார்.
இரு தினங்களுக்கு முன், புறநானூறு படம் டிராப் ஆனதுக்கு காரணம், டைரக்டர் சுதா கொங்காரா எழுதிய ஸ்கிரிப்டில் அடிக்கடி திருத்தம், மாற்றம் என சூர்யா குறுக்கீடு செய்ததுதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அண்ணன் வழியில் தம்பியும் கதையில் குறுக்கீடு செய்து ஜப்பான் படத்தை பிளாப் ஆக்கியது, இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.





