லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் கூலி திரைப்படம் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. குறிப்பாக இரண்டாம் பாதியில் திரைக்கதை ஆமை வேகத்தில் நகர்வதாகவும், இதில் லாஜிக் இல்லை என்றும் பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்தனர்.
இப்படியான சூழலில் லோகேஷ் கனகராஜின் அடுத்த திரைப்படம்தான் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அது கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான். தனது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஆரம்ப புள்ளியாக அந்த திரைப்படம் அமைந்தது. ஒரே இரவில் நடைபெறும் கதை போல அதனை செதுக்கியிருப்பார் லோகேஷ் கனகராஜ்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இது கைதி திரைப்படத்தின் முந்தைய பாகமாக எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். அதற்கு முன்னதாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஆக்சன் பாணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது.
இப்படியான சூழலில், லோகேஷ் கனகராஜின் இயக்கத்திற்கான திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் அவர், ரஜினியை வைத்தும் கமல்ஹாசனை வைத்தும் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. கூலி திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பே இருவரை சந்தித்து லோகேஷ் கதை கூறியதாகவும் அது அவர்களுக்கு பிடித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஆக்சன் பாணியில் இந்த திரைப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருக்கிறாராம். இதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு முன்பாகவே, இதனை லோகேஷ் கனகராஜ் எடுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் கார்த்தியும் தனது திரைப்படத்திற்கான வரிசையை மாற்றி இருக்கிறாராம். தற்போது அவர் தமிழ் இயக்கத்தில், மார்ஷல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு அவர் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருந்த நிலையில் தற்போது சுந்தர் சி படத்தில் அவர் நடிக்க உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





