கங்குவா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா தற்போது, கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து இருக்கிறார். அவர் சுதா கொங்கராவுடன் இணைந்து புறநானூறு படத்தில் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அதற்கான திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சமயத்தில்தான் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் கார்த்திக் சுப்புராஜ் உடன் அவர் கை கோர்த்தார்.
அந்த இயக்குனரும் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். இதனால் இந்த இணை மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. கேங்ஸ்டர் பாணியில் இந்த திரைப்படம் உருவாவதாக கூறப்படுகிறது.
படத்திற்கு அருவா என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் முதற்கட்ட படப்பிடிப்பை, அந்தமானில் நடத்தினார் கார்த்திக் சுப்புராஜ். அது தொடர்பான வீடியோவும் வெளியானது. இதில் பங்க் வைத்து ஆளே வித்தியாசமாக காட்சியளித்தார் சூர்யா. இந்தப் படத்தின் அறிவிப்பில், love laughter war என்ற டேக்லைனையும் கார்த்திக் சுப்புராஜ் சேர்த்திருந்தார்.
இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். கருணாகரன், ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோரும் இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். அந்தமானில் விறுவிறுப்பாக இதன் சூட்டிங் நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக உதகைக்கு படக்குழுவினர் சென்றனர். அங்கும் சில நாட்களிலேயே பணிகள் முடிக்கப்பட்டு இருக்கின்றன.
இதில் பிரம்மாண்டமாக ஒரு பாடல் எடுக்கப்பட்டதாக தகவல் கசிந்து இருக்கிறது. இந்த பாடல் முதல் சிங்கிளாக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது படக்குழுவினர் கன்னியாகுமரிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அங்கு படத்தின் முக்கிய காட்சிகளை எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கார்த்திக் சுப்புராஜ் எப்போதும் மதுரையை கதைக்களமாகக் கொண்டே படம் எடுத்து வரும் சூழலில் முதல் முறையாக அவர் தென்மாவட்டங்களில் கன்னியாகுமரிக்கு சென்று இருக்கிறார். அனேகமாக அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் பான் இந்தியா திரைப்படம் ஆக 10 மொழிகளில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளியாகிறது.





