கார்த்திக் சுப்புராஜ் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பதை பலரும் அறிந்திருப்பார்கள். ஒவ்வொரு வருடமும் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வரும்போதெல்லாம், “ஹேப்பி பர்த்டே தலைவா” என்று முதல் ஆளாக டிவீட் போடுபவர் அவர்.

ரஜினிகாந்தை வைத்து எப்படியாவது ஒரு படத்தையாவது இயக்கிவிட வேண்டும் என்ற கனவில் இருந்த கார்த்திக் சுப்புராஜிற்கு “பேட்ட” திரைப்படம் அந்த கனவை நிறைவேற்றியது. ஒரு Fan Boy ஆகவே அந்த படத்தை இயக்கியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.
இந்த நிலையில் நேற்று “ஜெயிலர்” திரைப்படம் வெளியானதை தொடர்ந்து பல பிரபலங்கள் அத்திரைப்படத்தை பார்த்து பாஸிட்டிவான ரிவ்யூக்களை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கார்த்திக் சுப்புராஜ் சென்னையில் ஒரு திரையரங்கில் “ஜெயிலர்” திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தார்.

அப்போது பல பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். அவர்களிடம் பேசிய கார்த்திக் சுப்புராஜ், “ஜெயிலர் படத்தின் ரைட்டிங் நன்றாக இருக்கிறது. நெல்சன், அனிருத் என இத்திரைப்படத்தில் பணியாற்றிய பலருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு காட்சியையும் நான் என்ஜாய் செய்து பார்த்தேன். படத்தில் டார்க் காமெடி பயங்கரமாக வேலை செய்திருக்கிறது. தலைவரை இது போன்ற ஒரு படத்தில் பார்ப்பதற்கு புல்லரிக்கிறது” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து ஒரு பத்திரிக்கையாளர், “நெல்சனின் கம்பேக் படம் இது என்று கூறலாமா?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ். “நெல்சன் எங்கே போனார், கம்பேக்கான்னு கேட்குறீங்க. நெல்சனின் ரைட்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்தில் பத்து லெவல் மேலே போய்விட்டார்” என்று கூறினார்.
அப்போது ஒரு பத்திரிக்கையாளர், “ரஜினிதானே சூப்பர் ஸ்டார்?” என ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு அவரை முறைத்துப்பார்த்த கார்த்திக் சுப்புராஜ், “கேட்ட கேள்வியே தப்பு, அதுவும் யார்கிட்ட கேட்கிற நீ?” என கூறினார். அவர் அப்படி கூறியதும் அங்குள்ள ரசிகர்கள் ஓவென கத்தி ஆர்ப்பரித்தனர்.





