பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக ஞானவேல் ராஜா பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அமீர் இயக்கிய அந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க, பாதியிலேயே அதற்கான வேலைகளில் இருந்து அவர் சென்று விட்டதாக இருப்பதுதான் குற்றச்சாட்டு. இது தொடர்பாக சமீபத்தில் பேசிய அமீர், அவருக்கும் எனக்கும் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
அதன் பிறகுதான் இருவருக்குள் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே வெளியே தெரிய ஆரம்பித்தது. கார்த்தியின் 25வது திரைப்படம் ஆன ஜப்பான் இசை வெளியீட்டு விழாவின் போது, அமீரை அழைக்காமல் இருந்தது தான் இதற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. இந்நிலையில் அமீரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ஞானவேல் ராஜா, அவர் மீது கடுமையான விமர்சனங்களை பதிவு செய்திருந்தார்.
பருத்திவீரன் பட விவகாரத்தின் போது அமீர் எனக்குப் பொய் கணக்கு காட்டி விட்டதாகவும், அவருக்கு படமே எடுக்கத் தெரியாது என்றும் கூறியிருந்தார். மேலும் அவரைப் பற்றி மட்டமாக ஞானவேல் ராஜா பேசியிருந்தார். இந்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. உடனடியாக இதற்கு ரியாக்ட் செய்த இயக்குனர் சசிகுமார், ஞானவேல் ராஜாவிற்கு பதிலடியாக பல கருத்துக்களை தெரிவித்தார்.
பருத்தி வீரனில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சமுத்திரக்கனி, ஞானவேல் ராஜா இந்த அளவு பேசுவதற்கு எங்கிருந்து தைரியம் வந்தது என்று கேள்வி எழுப்பினார். பாதியில் படத்தை விட்டு விட்டு ஞானவேல் ராஜா ஓட, பலரிடம் பணம் வாங்கி அமீர்தான் இந்த திரைப்படத்தை முடித்தார் என்று சமுத்திரக்கனி கூறியிருந்தார். இது மட்டுமல்லாமல் சுதா கொங்கரா, கரு பழனியப்பன், சினேகன், பாரதிராஜா உள்ளிட்டோரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இப்படி ரவுண்டு கட்டி அடித்ததால் வேறு வழி இல்லாமல், வருத்தம் மட்டுமே தெரிவித்தார் ஞானவேல் ராஜா. இதற்கு பதிலடி கொடுத்த சசிகுமார், யாருக்கு வருத்தம் தெரிவிக்கிறார்கள் அதில் ஒன்றுமே குறிப்பிடவில்லையே என்று கூறினார். இப்படியாக இருக்க கரு பழனியப்பன் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில் பேசியதாவது, “அதுதான் தயாரிப்பாளரே விட்டு போய்விட்டாரே, அதன் பிறகு எதற்கு நீங்கள் படத்தை கடன் வாங்கி எடுத்தீர்கள் என்று அமீரிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்கிறார், அதற்கு அமீரோ பழக்கத்துக்கு தான் என்று கூறுகிறார்.
இந்த மதுரைக்காரர்கள் மட்டும்தான் இப்படி பழக்கத்திற்காக செய்வார்கள். அதுவும் சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குனராக இருந்த சசிகுமார், ஒன்றரை கோடி ரூபாய் அமீருக்கு கொடுத்து இருக்கிறார். இதெல்லாம் யார் செய்வார்கள். ஆனால் ஞானவேல் ராஜவோ மதுரைக்காரர்களுக்கு மரியாதை தெரியாது என்று கூறுகிறார். ஞானவேல் ராஜா மரியாதை என்பது வார்த்தைகளால் நடந்து கொள்ளும் விதத்தில் இருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.





