எப்போதுமே அடுத்தடுத்து கிடைக்கும் வெற்றிகள் பெரிய உற்சாகத்தை தருவதில்லை. தொடர் வெற்றிகள் என்பது ஒரு கட்டத்தில் போரடித்து விடும். அதே நேரத்தில் தொடர் தோல்விகளை பார்த்து விரக்தியடைந்த நிலையில் ஒரு மாபெரும் வெற்றி கிடைக்கும் போது அது அளவில்லாத ஒரு சந்தோஷத்தை உற்சாகத்தை தந்து விடுகிறது.
அப்படிப்பட்ட ஒரு உற்சாகத்தில் தான் நடிகர் சூர்யாவின் குடும்பமும் அவரது ரசிகர்களும் இருந்து வருகின்றனர். ஏனெனில் அப்படி ஒரு மாஸ் வெற்றியை நடிகர் சூர்யாவுக்கு கருப்பு படம் தந்திருக்கிறது. சிங்கம் 2 படத்துக்கு பிறகு 13 ஆண்டுகள் கழித்து இந்த கம்பேக் சூர்யாவுக்கு கிடைத்திருக்கிறது.
இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கடந்த 15ம் தேதி வெளியான கருப்பு படம் 3 நாட்களில் 147 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. இப்போது 7 நாட்களில் உலகம் முழுவதும் இந்த படம் மொத்தம் 207 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டுமே கருப்பு படம் இதுவரை 100 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. எல்லை காவல் தெய்வமான கருப்பு சாமியை மையப்படுத்தி உருவான இந்த கதைக்களம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தியேட்டரில் பலரும் பக்தி பரவசத்தில் சாமி வந்து ஆடுகின்றனர்.
கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த படம் சிங்கம் 2. இந்த படம் மாஸ் வெற்றி படமாக இருந்தது. 160 கோடி ரூபாய் வசூலித்தது. இதற்கு பிறகு தியேட்டரில் வெளியான சூர்யா படம் எதுவும் பெரிய வரவேற்பை வெற்றியை பெறவில்லை. 13 படங்களில் நடித்தும் அதில் 2 படங்கள் மட்டுமே ஓடிடியில் வெளியாகி வணிக ரீதியாக லாபத்தை அடைந்தன.
அதனால் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பெரிய வெற்றி வேண்டும் என்கிற நிலையில் நடிகர் சூர்யா காத்திருந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்த கனவு கருப்பு படம் மூலம் நனவாகி உள்ளது. இந்த படம் இந்த வார இறுதிக்குள் ரூ. 250 கோடி வசூலை கடந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





