தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை துவங்கியிருக்கிறார் நடிகர் விஜய். இந்திய தேர்தல் தலைமை ஆணையத்தில், அந்த கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ள நிலையில், மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சி தலைவராக விஜய், பொதுச் செயலாளராக புஸ்லி ஆனந்த் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், அமைப்பு வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அரசியல் கட்சியை பொருத்த வரை, 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியை பிடிப்பதுதான் இலக்கு என்பதை முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தி விட்டார். அதனால் அதிமுக, திமுக கட்சிகளுக்கு எதிராக தான் தவெக தேர்தல் களத்தில் நிற்கப் போகிறது. நாடாளுமன்ற தேர்தல் தவெக வின் இலக்கு அல்ல என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகம், கட்சி பெயரிலேயே பல விமர்சனங்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது. வெற்றிக்கழகம் என்பதில் ‘க்’ விடுபட்டதாக ஒருபுறம் குறை சொல்லப்படுகிறது. தமிழக என்பதை தமிழ்நாடு என குறிப்பிட்டிருக்க வேண்டும் என்ற பலரும் கூறுகின்றனர்.
இதற்கிடையே விஜய் துவங்கிய கட்சியின் டிவிகே என்பது, எங்களது கட்சி ஆங்கில குறியீடு என தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். அதனால் டிவிகே என்ற பெயரில் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டு வருகிறோம். அந்த பெயரை தான் தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ளோம். எனவே, எங்கள் டிவிகே பெயரை பயன்படுத்தினால், தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என்றும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ரிலீசான சைரன் படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் அந்த படத்தில் நடித்த ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அவர்களிடம் நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் ஜெயம் ரவி, விஜய் நமக்கு நிறைய நல்ல படங்களை கொடுத்திருக்கிறார். அவர் நடித்த படங்களை மீண்டும் நாம் பார்க்கலாமே, என்று கூறினார்.
இதுகுறித்து பதிலளித்து பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், தரமான படங்களை விஜய், ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். அரசியல் அவருடைய அடுத்த கட்டம். நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். விஜய் சார் நடிக்க மாட்டேன் என்று சொன்னதும், ஒரு குழந்தை அழுத வீடியோ சமூக வலைதளங்களில் பார்த்தேன். ஒரு குழந்தைக்கே அப்படி இருக்கிறது என்றால், அதுபோல தான் நமக்கும் இருக்கும், என்று கூறினார்.





