நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்கள் நான்கு பேரில் ஒருவராக இருப்பவர். அந்த 4 நடிகர்களை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பார்கள், அந்த படமே பிளாப் ஆனாலும் அவர்களுக்கு லாபத்தில் வருமானம் குறையுமே தவிர, போட்ட பட்ஜெட்டில் நஷ்டம் வராது என்பதால்தான் அவர்கள் டாப் ஸ்டார் நடிகர்களாக இருக்கின்றனர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத்குமார் என்ற அந்த டாப் ஸ்டார்கள்தான், இன்றைய தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்கின்றனர். அதனால்தான் அவர்கள் நடிக்கும் படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்களும், இயக்க இயக்குனர்களும் தவமாய் தவம் இருக்கின்றனர்.
குறிப்பாக அஜீத்குமார், விஜய் போன்ற நடிகர்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருப்பதால் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க நடிகைகளுக்குள் பலத்த போட்டி நிலவுகிறது. எனினும் இமேஜ் உள்ள நடிகைகளுக்கு தான் மவுசு என்பதால் திரிஷா, நயன்தாரா, சமந்தா என சில நடிகைகள் மட்டுமே மீண்டும் மீண்டும் அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர்.
லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த திரிஷா, விடாமுயற்சி படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா தான் கதாநாயகி என்பது முடிவாகி உள்ளது. விஜய் தனது 69வது படத்தில் பிரேமலு பட நாயகி மமிதா பைஜூ நடிக்கிறார். ஆனால் அதில் விஜய்க்கு மகளாக தான் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அதனால் விஜய் நடிக்கும் 69வது படத்தில் திரிஷா அல்லது நயன்தாரா, இருவரும் இல்லாத பட்சத்தில் சமந்தா ஆகிய 3 பேரில்தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மூன்று பேருமே விஜயுடன் ஏற்கனவே பல படங்களில் ஜோடியாக நடித்தவர்கள்தான். அதே போல் கீர்த்தி சுரேஷ் பைரவா, சர்க்கார் ஆகிய 2 படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். அஜீத்குமாருக்கு அவர் ஜோடியாக நடித்தது இல்லை.
சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், ரகுதாத்தா படத்தின் பிரமோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நடிகர் அஜீத்குமாருக்கு ஜோடியாக நடிக்க விரும்புகிறேன், என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். அப்போது அஜீத்துக்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, நிச்சயமாக தங்கையாக நடிக்க மாட்டேன், ஜோடியாக மட்டுமே நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் அண்ணாத்த படத்தில் 70 வயதான ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





