சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பிரபலங்கள் மறைந்து விட்டதாக பொய்யான செய்தி பரவி வருவது அதிகரித்துவிட்டது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. இப்படி பல நடிகர்கள் நடிகைகள் இறந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து பதில் சொல்வதும் அடிக்கடி நடந்து வருகிறது.
இவ்வாறான தவறான பொய்யான வதந்திகள் மற்றவர்களை மட்டுமின்றி சம்பந்தபட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை உறவினர்களை நண்பர்களை எந்த அளவில் பாதிக்கும் என்பதை யோசிப்பதே இல்லை. இதுபோன்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகும் போது சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர் மனைவி பிள்ளைகள் எப்படிப்பட்ட ஒரு துயரத்தை சந்திப்பார்கள் என்பதை வதந்தி பரப்புவோர் உணர வேண்டும்.
வயதில் மூத்த நடிகர்கள் நடிகைகள் பேச்சாளர்கள் அரசியல் தலைவர்கள் என பலர் குறித்தும் இதுபோன்ற வதந்தியான மறைவு செய்திகள் இணையத்தில் அடிக்கடி வெளியாகி பதட்டத்தை பரபரப்பை ஏற்படுத்தி விடுகின்றன. இதுபோன்ற பொய் வதந்திகளை பரப்புவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்த வதந்தி பட்டியல் வரிசையில் இப்போது பிரபல நடிகர் பார்த்திபனும் இணைந்து விட்டார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான இயக்குனர் பார்த்திபன் திடீரென இறந்துவிட்டதாக யூடியூப்பில் ஒரு வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, இதுபோன்ற செய்திகள் மரணம் அடைய வேண்டும். இதை தயாரிப்பவர்கள் தங்களது வாய்க்கரிசிக்காக இதை செய்தாலும் மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தி தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா?
சம்பந்தப்பட்டவர்கள் குடும்பம் ஒரு தாயும் தாரமும் பெத்ததுகளோ யோசிக்க வேண்டும். இது பலமுறை என்னை மட்டுமல்ல பலரையும் இறைவனடி சேர சார்ட்டஸ்ட் ரூட் டிக்கெட் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். அவர்களாக திருந்த அந்த சுடுகாட்டு சுடலை சாமியும் ஆறாவது அறிவோ உதவ வேண்டும் என்று ஆதங்கமாக ஒரு பதிவை செய்திருக்கிறார் நடிகர் பார்த்திபன். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





