சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் ஜெயிலர். அதற்கு முன்பாக அவர் நடித்த சில திரைப்படங்கள் பெரிய வெற்றியை பார்க்க முடியாமல் சென்றது. கோச்சடையான், லிங்கா, தர்பார் என ரஜினிகாந்தின் தோல்வி திரைப்படங்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த சமயத்தில் சிறுத்தை சிவா உடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். ஏற்கனவே விஸ்வாசம் என்னும் மிகப்பெரிய ஹிட் படத்தை சிவா கொடுத்திருந்ததால், அவரை அழைத்து இந்த வாய்ப்பை வழங்கினார். ஆனால் இதனை சிறுத்தை சிவா உருப்படியாக செய்யவில்லை என்று தான் கூற வேண்டும்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம், படு தோல்வியை சந்தித்தது. மிகவும் சுமாராக எழுதப்பட்ட திரைக்கதை, அந்த திரைப்படத்தின் வெற்றியை உறுதிப்படுத்தாமல் போனது. எந்த ஒரு விதத்திலும் படம் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இல்லாததால், அண்ணாத்த படத்தை பார்த்த பலரும் அதனை கழுவி ஊற்றினார்கள்.
அந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு சகோதரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஜோடியாக நயன்தாரா நடித்திருக்க, குஷ்பூ மீனா உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்று இருந்தார்கள். இப்படியான சூழலில் அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார் நடிகை குஷ்பு. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர்,
முதலில் அந்த திரைப்படத்தில் எனக்கு முக்கியத்துவமான கதாபாத்திரம் வழங்கப்பட்டது. ரஜினி சாருக்கு ஜோடி கதாபாத்திரம் என்று கூறினார்கள். ஆனால் படம் வளர வளர, எனது கேரக்டருக்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. என்னையும் மீனாவையும் தான் படத்தின் கதாநாயகிகள் என்றும் முதலில் கூறினார்கள். இதனால் வேறு எந்த நடிகையும் வர மாட்டார் என்று நம்பி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டோம்.
ஆனால் திடீரென ரஜினி சாருக்கு ஒரு கதாநாயகி பாத்திரத்தை அறிமுகப்படுத்தினார்கள். அப்போதே எனது ரோல் நகைச்சுவை ஆக்கப்பட்டதை உணர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார். அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படியான சூழலில், அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தது குறித்து குஷ்பு வருத்தம் தெரிவித்திருப்பது திரையுலகில் பேசு பொருள் ஆகியுள்ளது.





