கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு. பி வாசு இயக்கத்தில் நடிகர் பிரபுவுடன் குஷ்பு நடித்த சின்னதம்பி படம் வெளியான போது அவருக்கு சில ரசிகர்கள் கோவில் கட்ட முயற்சிப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை குஷ்பு.
தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த குஷ்பு ஒரு கட்டத்தில் இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு அனந்திகா அவந்திகா என்ற 2 மகள்கள் உள்ளனர். அதில் 2வது மகள் அவந்திகா விரைவில் சினிமாவில் அறிமுகமாகிறார்.
வெளிநாட்டில் சில ஆண்டுகள் தங்கி நடிப்பு பயிற்சி பெற்று திரும்பிய அவந்திகா ஆரம்பம் என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகி ஆகிறார். மேலும் தமிழில் டபுள் ஆக்குபன்சி என்ற படத்தில் அவந்திகா நடித்து வருகிறார். இதுகுறித்து நடிகை அவந்திகா கூறியதாவது, நான் நடிக்க போகிறேன் என்று சொன்னதும் அம்மாவும் அப்பாவும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள்.
சினிமா சாதாரண விஷயம் இல்லை; கொஞ்சம் கடினமானது, பார்த்துக்கொள் என்று மட்டும் அவர்கள் எனக்கு அட்வைஸ் சொன்னார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பே நான் நடிக்க தயாராகி விட்டேன். உடம்பை ஸ்லிம்மாக்கி நடிப்பு பயிற்சி பெற்று தயாரான பிறகுதான் நடிக்க வாய்ப்பு தேடினேன்.
அப்பா அம்மா சொன்ன மாதிரி சினிமாவை சீரியஸாக எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன். சில ஆண்டுகள் என்னை அம்மாவோடு ஒப்பிடுவார்கள். அதை தவிர்க்க முடியாது. அம்மாவுக்கு கிடைத்த மாதிரியான கேரக்டர் எனக்கும் கிடைக்க வேண்டும். அவர் கொடுத்த உழைப்பு அக்கறையை நானும் கொடுக்க வேண்டும்.
அம்மாவின் ஜீன் என்னிடம் உள்ளது. நான் கடுமையாக உழைக்கும் போது அம்மாவின் இடத்திற்கு வர முடியும் என்று நினைக்கிறேன். அப்பா அம்மா என் விஷயத்தில் தலையிடாமல் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். நானே கதை கேட்கிறேன். நானே முடிவு செய்கிறேன். மக்களுக்கு பிடித்த நடிகையாக வருவேன். அதற்காக கடினமாக உழைப்பேன் என்று அவந்திகா கூறுகிறார்.





