புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புகழை இப்போதும் மக்கள் பாடிக் கொண்டு இருக்கின்றனர். அதிமுக கட்சி சார்ந்தவர்கள் மட்டுமின்றி, எம்ஜிஆரின் சினிமா ரசிகர்களும் பொதுமக்களும் இன்னும் எம்ஜிஆரை தனது நினைவுகளில் வாழ வைத்துக்கொண்டு தான் இருக்கின்றனர். அவர் கடந்த 1987ம் ஆண்டில் மறைந்தார். ஆனால் 37 ஆண்டுகள் கடந்தும் இன்னும் எம்ஜிஆரின் புகழ் மறையவில்லை. சிறிதும் மங்கவும் இல்லை.
எம்ஜிஆர் கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவதில் வள்ளல் என்பது எல்லோரும் அறிந்த உண்மைதான். ஆனால் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு மட்டுமின்றி தன் கண் எதிரே ஒருவர் கஷ்டப்படுகிறார் என்றால் அவர்களுக்கு உடனே உதவி செய்வதில் அவருக்கு நிகர் அவர்தான் என்பதை பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம் நம் கண்முன் கொண்டு வருகிறது.
முதல்வராக இருந்த போது புரட்சித் தலைவர் எம்ஜிஆர், காரில் சென்றிருக்கிறார். அப்போது ரயில்வே கிராஸிங்கில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் ரயில் கடந்து செல்வதற்காக காரில் எம்ஜிஆர் காத்திருக்கிறார். அப்போது அருகில் கூட்டமாகவும் அழுகுரலும் கேட்டிருக்கிறது.
இதையடுத்து தனது அருகில் இருந்த உதவியாளரிடம் சொல்லி, என்னவென்று பார்த்துவிட்டு வாருங்கள் என்று கூறியிருக்கிறார். அவர் சென்று பார்த்திருக்கிறார். அங்கு வசிக்கும் குதிரை வண்டி ஓட்டுபவரின் குதிரை திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டது. அந்த குடும்பமே அந்த குதிரையை நம்பி தான் இதுவரை வாழ்ந்திருக்கிறது.
அதனால் திடீரென குதிரை நோய்வாய்ப்பு இறந்துவிட்டதால், இனி என்ன செய்வது, வாழ்வாதாரம் என்ன, இப்படி குடும்பத்தை காப்பாற்றிய பாசமான குதிரை போய்விட்டதே என்று குதிரைக்காரர் உட்பட அவரது குடும்பமே தெருவில் நின்று அழுது கொண்டிருப்பதாக, அவர் எம்ஜிஆரிடம் கூறியிருக்கிறார்.
மேலும் குதிரை அடக்கம் செய்யக் கூட அவர்களிடம் பணம் இல்லை என்றும் உதவியாளர் கூறியிருக்கிறார். உடனே குதிரையை அடக்கம் பண்ண ஏற்பாடுகளை செய்ய சொன்ன எம்ஜிஆர், ஒரு குதிரையின் விலை என்ன, அந்த குதிரை, வண்டியில் பூட்டி ஓடப் பழக எத்தனை நாட்கள் ஆகும் எனவும் விசாரித்த எம்ஜிஆர், மொத்தமாக ஒரு பெரிய தொகையை அந்த குடும்பத்திடம் வழங்குமாறு கூறியிருக்கிறார். இப்படி துன்பத்தில் இருப்போருக்கு எல்லாம் தானாக தேடிப்போய் உதவியதால் தான் எம்ஜிஆரை இன்றும் மக்கள் பொன்மனச் செம்மல் என்று போற்றுகின்றனர்.





