கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி கமெர்சியல் இயக்குனராக வலம் வந்தவர். “சேரன் பாண்டியன்”, “நாட்டாமை”, “முத்து”, “படையப்பா”, “பஞ்ச தந்திரம்”, “தசாவதாரம்” போன்ற தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர் அவர்.

இவரது திரைப்படங்களில் ரொமான்ஸ், காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்து வகையான மசாலாத்தனங்களும் இருக்கும். தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட ஒரு இயக்குனராக திகழ்ந்தவர் இவர்.
எனினும் சமீப காலமாக இவர் இயக்கிய திரைப்படங்கள் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை. எனினும் தற்போதும் பல திரைப்படங்களை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் தமிழில் “ஹிட்லிஸ்ட்” என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறாராம். அந்த படத்தில் 90ஸ் கிட்ஸ்களின் விருப்பத்திற்குரிய இயக்குனரின் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளாராம்.

“புது வசந்தம்”, “பூவே உனக்காக”, “சூர்ய வம்சம்”, “வானத்தைப் போல” ஆகிய வெற்றித் திரைப்படங்களை இயக்கிய விக்ரமனின் மகனான விஜய் கனிஷ்காவை கே.எஸ்.ரவிக்குமார் ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளாராம்.
இதற்கு பின்னால் ஒரு நன்றிகடன் இருக்கிறதாம். அதாவது விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் உதவி இயக்குனராக ஒரு காலகட்டத்தில் பணியாற்றினார். அப்போது சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரி, விக்ரமனிடம், “ஒரு கன்னட படத்தை ரீமேக் செய்யலாம் என்று இருக்கிறேன். உங்கள் உதவி இயக்குனர்களில் திறமையான ஆள் யாராவது இருந்தால் கூறுங்கள்” என்று கேட்டபோது, விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமாரின் பெயரை கூறியிருக்கிறார்.

அவ்வாறுதான் கே.எஸ்.ரவிக்குமாருக்கு “புரியாத புதிர்” திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. இந்த நன்றிகடனை மனதில் வைத்துத்தான் கே.எஸ்.ரவிக்குமார் விக்ரமனின் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளாராம்.





