ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். அவர் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இருந்தாலும் அவரது படங்களிலேயே இன்றுவரை பலரது ஃபேவரைட் ஆக இருப்பது படையப்பா. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்த படம்தான் படையப்பா.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் இன்றுவரை ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. அதிலும் ரஜினிகாந்த்தின் ஸ்டைல் அந்த படத்தின் மூலம் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தது. அதேபோல் ரஜினிகாந்த்துக்கு ஈடாக ரம்யா கிருஷ்ணனும் தனது நடிப்பில் மிரட்டி இருந்தார். இப்படி பல சிறப்புகளை கொண்ட படையப்பா படம் இன்னொரு சிறப்பையும் கொண்டிருக்கிறது.
அதாவது கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக மாறிய சிவாஜி கணேசனுக்கு இந்த படத்தில்தான் முதன் முறையாக ஒரு கோடி சம்பளம் கிடைத்தது. இந்த நிலையில் படையப்பா படத்தின் சுவாரசிய சம்பவங்களை அதன் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
அந்தப் பேட்டியில் பேசிய அவர், “படையப்பா படத்தின் ஃபுட்டேஜ் 14 ரீல்ஸ் வருகின்றன. அனைத்து சீன்களும் நன்றாக இருந்தன. குறிப்பாக படத்தின் ஷூட்டிங்கின்போது நிறைய எடுத்தோம். அதை ரஜினி சார் என்னிடம் கேட்பார். நானும் சரி என்று சொல்லிவிடுவேன். ஏனென்றால் எனக்கும் தெரியாது இதை பண்ணினால் நன்றாக இருக்கும் என்று. படத்தை மொத்தமாக எடுத்து முடித்து எடிட் செய்து போட்டு பார்த்தோம்.
அப்போது எல்லா சீனும் நல்லா இருக்கே. ஆனா கொஞ்சம் டைம் ஆன மாதிரி இருக்குல்ல. டைம் என்ன என்று என்னிடம் ரஜினி கேட்டார். நான் உடனே எதுக்கு சார் டைம் பார்க்கணும். மொத்தம் 19 ரீல்ஸ் இருக்கின்றன என்றேன். அதற்கு அவர் அப்டியா 19 ரீல்ஸ்லாம் தாங்காது. பேசாம ரெண்டு இடைவேளைகள் விட்டால் என்ன. ஹிந்தி படத்தில்கூட அப்படி செய்திருக்கிறார்கள் என சொன்னார். நான் அதெல்லாம் ஒத்துவராது சார் என்றேன்.
அன்றைய இரவு ரஜினி சார் கமல் சாருக்கு ஃபோன் செய்து, மொத்தம் 19 ரீல்ஸ் இருக்கிறது. ரெண்டு இடைவேளை விடலாம் என நான் சொன்னேன். அதுக்கு டைரக்டர் ஒத்துக்கொள்ளவில்லை என்றிருக்கிறார். அதற்கு கமல் சாரோ, ‘பைத்தியமா உனக்கு. ரெண்டு இடைவேளை காட்சிலாம் ஒத்தே வராது. இதை நீ இயக்குநர்ட்ட கொடுத்துடு அவர் பார்த்துக்குவார் என கூறியிருக்கிறார். கதைக்கு என்ன தேவையோ அவர் செய்வார் என தெரிவித்திருக்கிறார்.
மறுநாள் என்னிடம் வந்த ரஜினி கமலும் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. நீங்க எந்த சீனை தூக்கனும்னு நினைக்கிறீங்களோ தூக்குங்க. மொத்தமா 14 ரீல்ஸுக்கு படத்தை கொண்டு வந்துட்டு என்னிடம் காட்டுங்க என சொன்னார். அப்புறம் நான் ஒர்க் செய்தேன்” என தெரிவித்தார் ரவிக்குமார்.





