தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருப்பவர் மணிகண்டன். காதலும் கடந்து போகும் நெற்றிக்கண் காலா ஜெய்பீம் குட்நைட் லவ்வர் படங்களை தொடர்ந்து அவர் நடித்த படம் குடும்பஸ்தன் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. குட்நைட் லவ்வர் அடுத்து குடும்பஸ்தன் என தொடர்ந்து 3 வெற்றிப் படங்களை தந்த ஹீரோவாக மணிகண்டன் இருக்கிறார்.
ஆரம்பத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்தவர் மணிகண்டன். பிறகு டப்பிங் ரைட்டராகவும் இருந்திருக்கிறார். சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும், ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் இருந்த மணிகண்டன், நல்ல மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜினி துவங்கி ஜனகராஜ் வரை அவர்களது குரலில் அப்படியே பேசும் திறமை மிக்கவர்.
நடிகர் மணிகண்டனுக்கு, காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடிக்க அமைந்த வாய்ப்பு பெரிய அடையாளத்தை அவருக்கு பெற்றுத் தந்தது. அதுவும் ரஜினியுடன் வாக்குவாதம் செய்யும் அவரை எதிர்த்து பேசும் அளவுக்கு ஒரு துணிச்சலான கேரக்டரில் மணிகண்டன் காலா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல் ஜெய்பீம் படத்தில், விசாரணை கைதியாக ஜெயிலுக்குள் போலீசாரால் சித்ரவதை செய்யப்படும் ஒரு அப்பாவியாக மணிகண்டனின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. அதன்பிறகு மோட்டார் மோகன் கேரக்டரில் குறட்டை பிரச்னை உள்ள இளைஞனாக அவரது நடிப்பு மிகவும் அழுத்தமாக இருந்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
இப்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிய குடும்பஸ்தன் படத்திலும் நடுநிலை குடும்பத்தை சேர்ந்த ஒரு மனிதன் மனைவி, பெற்றோரின் பொருளாதார சுமையை ஏற்று வாழ்க்கை நடத்தும்போது சந்திக்கும் பிரச்னைகளை, சிக்கல்களை மிகவும் நுணுக்கமாக சொன்ன இந்த படத்திலும் மணிகண்டனின் நடிப்பு ரசிகர்களிடம் பேச வைத்திருக்கிறது.
நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் சுவாரசியமாக கொங்கு வாழ்க்கை கதைகளை வீடியோக்களாக டைரக்ட் செய்து வெளியிட்டு மக்களின் கவர்ந்த இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான படம்தான் குடும்பஸ்தன். இந்த படம் வருகிற 28ம் தேதி, ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் குடும்பஸ்தனை ரசித்தவர்கள், இனி வரும் 28ம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்திலும் குடும்பஸ்தன் படத்தை திரும்ப திரும்ப பார்த்து ரசிக்கலாம்.





