சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படங்கள், சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தன. இதில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சூர்யா தேசிய விருதை பெற்றார்.
இதன்பிறகு அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம், திரையரங்குகளில் வெளியானது. ஹாட்ரிக் வெற்றியை அவர் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதை எடுத்து பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் சூர்யா நடித்தார்.
இந்தப் படத்தை அவரது 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமே தயாரித்தது. ஆனால் படப்பிடிப்பின் போது சூர்யாவுக்கும் பாலாவுக்கும் ஏற்பட்ட சிறிய மனக்கசப்பால் வணங்கான் திரைப்படம் கைவிடப்பட்டது. இதை எடுத்து அருண் விஜயை வைத்து பாலா இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த சூழலில், சிறுத்தை சிவா உடன் கைகோர்த்தார் சூர்யா.
கங்குவா என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. முந்தைய பிறவிக்கும் தற்காலத்திற்கும் இடையில் உள்ள கனெக்சனை இந்த படத்தில் விளக்குகிறார் சிறுத்தை சிவா. இதில் பெரும்பாலான படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்றது.
சூர்யா பிறந்தநாள் அன்று இந்த படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகின. இதில், திஷா பாண்டே, யோகி பாபு, கோவை சரளா, நட்டி, ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு, சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் வெற்றிமாறன் கவனம் செலுத்தி வருவதால் அவர் தற்போது சுதா கொங்கராவுடன் இணைந்துள்ளார்.
இதில் சூர்யாவுடன், துல்கர் சல்மான் நஸ்ரியா நசீம் மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர். படத்தில் சூர்யாவுக்கு கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தை சுதா கொங்கரா வடிவமைத்துள்ளாராம். ஆயுத எழுத்து திரைப்படத்தில் வந்த மைக்கேல் கதாபாத்திரம் போல் இது பவர்ஃபுல்லாக இருக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். இதற்காக தனது எடையை குறைக்கும் வேளையில் சூர்யா ஈடுபட்டிருக்கிறாராம். அனேகமாக அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





