இயக்குனர் பாலா தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனராக திகழ்பவர். எளிய மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் சோகம், சந்தோஷம், ஏமாற்றம் போன்றவற்றை படமாக்குவதில் பாலா வல்லவர். சமுதாயத்தில் கீழ் நிலை என்று ஒதுக்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை கண் முன் கொண்டு வருபவர் பாலா.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “நந்தா” திரைப்படத்தில் லைலா நடித்தபோது நடந்த சம்பங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.
“நந்தா” திரைப்படத்தில் ஈழத்தமிழ் பெண்ணாக லைலா நடித்திருந்தார். லைலாவுக்கும் தமிழுக்குமே சம்பந்தம் இல்லை என்னும்போது ஈழத்தமிழ்ப் பெண்ணாக அவரை நடிக்க வைப்பது பாலாவிற்கு ஒரு சவாலாகவே இருந்துள்ளது.
வழக்கமாகவே பாலா படப்பிடிப்புத் தளத்தில் கொஞ்சம் கடுமையாகத்தான் நடந்துகொள்வார். அந்த வகையில் லைலாவிடமும் சற்றுக் கடுமையாக நடந்துகொண்டாராம். இது லைலாவிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதனால் லைலா கொஞ்சம் சோகத்தில் ஆழ்ந்தாராம்.
“இந்த படத்தில் நடிக்க மாட்டேன்” என லைலா ஹோட்டல் அறையில் உட்கார்ந்து அழுதாராம். அப்போது அவருடன் இருந்தவர்கள், “இந்த இயக்குனர் மிகச் சிறந்த இயக்குனர். இந்த படத்தில் நடித்தால் உனக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும்” என்று கூறியிருக்கின்றனர். அதன் பிறகுதான் சமாதானமானாராம் லைலா.
“நந்தா” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு லைலா அத்திரைப்படத்தை பார்த்திருக்கிறார். அதில் தனது கதாபாத்திரத்தை பார்த்து அவருக்கே அழுகை வந்துவிட்டதாம். உடனே பாலாவின் காலில் விழுந்து, “நான் உங்கள் மீது கோபமாக இருந்தேன். என்னை மன்னித்துவிடுங்கள். அடுத்த படத்தில் நீங்கள் எனக்கே வாய்ப்புக்கொடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டாராம். அதன் பிறகு பாலா இயக்கிய “பிதாமகன்” திரைப்படத்திலும் லைலா நடித்தார்.





