அமரன் படம் தந்த அபார வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு பராசக்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலீலா அதர்வா ரவி மோகன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு இதுவும் ஒரு பயோபிக் படமாக அமைந்துள்ளது.
இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், கல்லூரி மாணவர் கேரக்டரில் நடிக்கிறார். கடந்த 1960 – 65களில் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் வலுவாக நடந்தது. அப்படி நடந்த ஒரு போராட்டத்தில் இராசேந்திரன் என்ற கல்லூரி மாணவர், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். மொழிப் போர் தியாகியான அவரது கதையில்தான் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
ஏற்கனவே வணங்கான் படத்தில் நடிக்க மறுத்து விலகிய சூர்யாவுக்கு, வணங்கான் படத்திற்கு கிடைத்த அபார வரவேற்பு பலத்த ஏமாற்றத்தை தந்தது. அதே போல் இந்த படமும் சூர்யா நடிக்க கமிட் ஆகி பிறகு விலகிய படம்தான். இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றால், 2 வெற்றிப் படங்களை இழந்த நிலை, சூர்யாவுக்கு ஏற்படும்.
இதற்கிடையே பாண்டிச்சேரியில் தற்போது பராசக்தி படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இதில் ஒரு பெரிய மைதானத்தில் கிரீன் மேட் பின்னணியில் பல காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்போது பல படங்கள் இப்படிதான் கிரீன் மேட் பின்னணியில் எடுத்து பிறகு சிஜி விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகள் மூலம், குறிப்பிட்ட இடங்களில் எடுத்தது போல் மாற்றப்படுகின்றன.
ராஜமவுலி இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி படம், பெரும்பாலும் கிரீன் மேட் பின்னணியில்தான் எடுக்கப்பட்டது. அதே போல் பராசக்தி படத்தின் பல காட்சிகள் இப்போது பாண்டிச்சேரியில் ஒரு மைதானத்தில் கிரீன் மேட் பின்னணியில் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் மார்கோ. இந்த படத்தில் ரசிகர்களின் அபார வரவேற்பை பெற்ற மலையாள நடிகர் உன்னிமுகுந்தன், பராசக்தி படத்தில் இணைந்துள்ளார். அவரும் இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதனால் இந்த படத்தில் பிரதான வில்லன் ரவி மோகனா, உன்னி முகுந்தனா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.





