இப்போதெல்லாம் தோல்வி ஆன படங்களை கூட பெரிய வெற்றிப்படம் சித்தரித்து வதந்தியை கிளப்பி விடுகின்றனர். படம் ரிலீசான ஓரிரு தினங்களிலேயே இப்படியே புரளியை பரவ விட்டு, பலரையும் ஏமாற்றி தியேட்டர்களுக்கு வரவழைத்து விடுகின்றனர். படம் பார்த்த பிறகு பலரும், இந்த படம் நல்லா இல்லையே, ஒருவேளை நமக்குதான் ரசிக்க தெரியலையோ, என குழம்பி போய் விடுகின்றனர்.
லியோ, ஜெயிலர், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாரிசு, துணிவு, மார்க் ஆண்டனி என இப்படி பல படங்கள், ஏமாற்றம் தரக்கூடிய வகையில் இருந்தாலும், மீடியாக்களில் வெற்றிப் படம், சிறந்த படம் என கிளப்பி விட்டே ரசிகர்களை ஏமாற்றி தியேட்டர்களுக்கு வரவழைப்பதும் இப்போது டிரண்டிங் ஆகி விட்டது.
அதாவது ஓட்டல் முன் விதவிதமான வகை வகையான சைவ, அசைவ விருந்து குறித்த புகைப்படங்கள் கலரில் விளம்பரமாக இருக்கும். அதை பார்த்துவிட்டு ஆசையாக, உள்ளே ஆர்வமாக செல்லும் வாடிக்கையாளர்களுக்கு ருசியும் தரமும் இல்லாத உணவை பரிமாறுவர். அதுபோல் நல்ல படம், சிறந்த படம் என விளம்பரப்படுத்தி விட்டு, தரமில்லாத படங்களை ரசிகர்களை ஏமாற்றி பார்க்க வைக்கும் மிக மோசமான வியாபார யுக்தி தான் இது என்பது, ரசிகர்களுக்கு கவலையும், அதிர்ச்சியும் தரும் உண்மையாக இருக்கிறது.
இந்நிலையில், லைக்கா புரடக்சன்ஸ் தயாரிப்பில் கடந்த 9ம் தேதி வெளியானது லால் சலாம் படம். இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். ரஜினி மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசை அமைந்திருந்தார். ஹீரோக்களாக விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்திருந்தனர்.
ஏற்கனவே தனுஷ் நடித்த 3 மற்றும் கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியவர்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆனால் இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெறாமல் தோல்வியடைந்தன. அதைத் தொடர்ந்துதான் 3வது படமாக, லால்சலாம் படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்த படமும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ரஜினி கேமியோ ரோலில் நடித்ததை, ரஜினி ரசிகர்களே பார்க்கவில்லை என்பதுதான் இதில் அவலம்.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா, வீட்டுக்குள் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், படத்தின் டைரக்டர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் லைக்கா புரடக்சன்ஸ் சார்ந்த நிர்வாகிகள், படக்குழுவில் பணியாற்றி முக்கிய நபர்கள் மட்டுமே கலந்துக்கொண்டுள்ளனர். படத்தில் இரட்டை நாயகர்களாக நடித்த விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவருமே இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. பிளாப் ஆன படத்துக்கு வீட்டுக்குள் வெற்றி விழா கொண்டாடி, அதுவும் ரஜினியை வைத்த காமெடி செய்திருப்பதாக, நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.





