நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ் நாகர்ஜூனா உபேந்திரா சவுபின் சாஹிர் அமீர்கான் ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படப்பிடிப்பு வரும் சில வாரங்களில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
கூலி படம் ரஜினியின் 171வது படமாகும். இதற்கு முன் அவர் தசெ ஞானவேல் இயக்கத்தில் நடித்த 170வது படம் வேட்டையன். இந்த படம் கடந்தாண்டில் வெளியாகி உலகம் முழுவதும் ரூ. 265 கோடி வசூலித்தது. கடந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் அதிகம் வசூலித்த 3வது படமாக வேட்டையன் இருந்தது.
நடிகர் ரஜினிகாந்த் இப்போது நடித்துவரும் கூலி படத்துக்கு பின் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு முன்பாக 3 மாதங்கள் ஓய்வு எடுக்கும் ரஜினிகாந்த், தனது சுயசரிதையை எழுத திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் சமீபத்தில் வெளியானது.
அதனால் ஜெயிலர் 2 படப்பிடிப்பு 3 மாதங்களுக்கு மேல் தள்ளிப் போக வாய்ப்புள்ளது. ஆனால் ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக 13 மாதங்கள் தேவைப்படும் என ஏற்கனவே நெல்சன் கூறியிருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் மத்தியில்தான் முடிவடையும். அதனால் தீபாவளிக்கு தான் ரிலீஸாக வாய்ப்புள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1975ம் ஆண்டில் இயக்குனர் கே பாலசந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் அறிமுகமானார். இப்போது 2025ம் ஆண்டில் ரஜினி தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டு பொன்விழாவில் உள்ளார். அதனால் தனது ரசிகர்களுக்கு தனது பொன்விழா ஆண்டு பரிசாக தனது சுயசரிதை நூலை எழுதி அதை பரிசாக அவர் அளிக்க திட்டமிட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே மற்றொரு முக்கிய தகவலாக, கூலி படத்தின் டீசர் குறித்து முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது வரும் 2 வாரங்களுக்குள் கூலி படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளது. அதே போல் கூலி படமும் மே மாதத்திலேயே திரைக்கு வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், வரும் மே மாதம் கூலி படத்தை அவர் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.





