நடிகர் விஜய் நடிப்பில் உருவான கடைசி படம் ஜனநாயகன். எச் வினோத் இயக்கத்தில் கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பில் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ பிரியாமணி கௌதம் மேனன் நரேன் பிரகாஷ் ராஜ் பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியாக இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் பிரச்னை காரணமாக இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றம் வரை சென்றும் இந்த படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகளும் வசனங்களும் இருப்பதால் படத்துக்கு சென்சார் சான்றிதழ் உடனே தர முடியாது என்று கூறிவிட்டனர்.
இதுகுறித்த வழக்கை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வாபஸ் பெற்றுள்ள நிலையில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி ரீவைசிங் கமிட்டிக்கு ஜனநாயகன் படம் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை ரீவைசிங் கமிட்டி இந்த படத்தை பார்க்கவில்லை. ரீவைசிங் கமிட்டிக்கு அனுப்பிய படத்தை 40 தினங்களுக்குள் பார்த்துவிட வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக உள்ளது.
அதன்படி இந்த மாதம் 17ம் தேதிக்குள் ஜனநாயகன் படத்தை ரீவைசிங் கமிட்டி பார்த்தாக வேண்டும். அப்படி பார்த்துவிட்டு சான்றிதழ் தந்தாலும் சட்டசபை தேர்தல் காரணமாக இந்த படத்தை உடனே ரிலீஸ் செய்யவும் முடியாது. ஏனெனில் நடிகர் விஜய் ஒரு அரசியல் தலைவராக உள்ளார். மேலும் தேர்தல் நேரத்தில் படம் வெளியானால் எதிர்பார்த்த வசூலும் கிடைக்காது.
அதனால் வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் அந்த தேர்தல் நடக்கும் தேதிக்கு பிறகு அடுத்து வரும் வியாழன் வெள்ளியில் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு தேர்தல் நடக்கும் பட்சத்தில் ரிலீஸ் தேதியை மே 7ம் தேதிக்கு தள்ளி வைக்கவும் முடிவு செய்துள்ளனர்.
ஏனெனில் வருகிற ஏப்ரல் 30ம் தேதி தெலுங்கு நடிகர் ராம்சரண் நடித்த பெத்தி படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அந்த படத்துக்கு தெலுங்கானா ஆந்திரா மற்றும் ஓவர்சீஸில் அதிக எண்ணிக்கையில் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்பதால் ஜனநாயகன் படத்தை மே 7ம் தேதிக்கு ரிலீஸ் மாற்றி விட திட்டமிட்டுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.





