நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் விக்ரம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் சூர்யா பகத் பாசில் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பிளாக் பஸ்டர் மூவியாக நடிகர் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
அதன்பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் கடந்தாண்டில் வெளியாகி மாபெரும் தோல்வியை தழுவியது. ஷங்கர் கமல் கூட்டணியில் 28 ஆண்டுகளுக்கு முன் 1996ம் ஆண்டில் வெளியான இந்தியன் படம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், இந்தியன் 2 படம் படுமோசமான தோல்வியை சந்தித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
எனினும் இந்தியன் 2 படப்பிடிப்பின் போதே இந்தியன் 3 படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை இயக்குனர் ஷங்கர் எடுத்து முடித்துவிட்டார். இந்தியன் 2 படத்துக்கு கிடைத்த மோசமான வரவேற்பை அடுத்து, இந்தியன் 3 படத்தில் திரைக்கதை காட்சியமைப்பில் பல மாறுதல்களை செய்து மீண்டும் ஒரு மாதம் ரி ஷூட் நடத்தி அந்த படத்தை சிறப்பாக கொண்டு வர கமலும் ஷங்கரும் முடிவு செய்திருக்கின்றனர்.
இதற்கிடையே இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் சிம்பு திரிஷா உள்ளிட்டோர் நடித்த தக்லைப் படம் வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி ரிலீஸாகிறது. நாயகன் படத்துக்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் கமல் காம்போவில் இந்த படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. தக்லைப் பெரிய வெற்றியை பெற்றால் மணிரத்னம் கமல் கூட்டணி மீண்டும் இணைந்து பயணிக்கும் வாய்ப்புள்ளது.
அரசியல் களப்பணியில் கமல் தீவிரம் காட்டி வந்தாலும் சினிமாவிலும் தன் பயணத்தில் எந்த தடையும் ஏற்படாமல் மிக கவனமாக இருந்து வருகிறார். இப்போது தக்லைப் படத்துக்கு பிறகு கமல் நடிக்கும் 237வது படத்தை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் டைரக்ஷன் செய்கின்றனர். ஆக்சன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் ப்ரீ புரடக்சன் பணிகள் இப்போது வேகமாக நடந்து வருகின்றன.
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் சென்னையில் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியன் 2 தக்லைப் அன்பறிவ் இயக்கும் 237வது படம் என கமல் தனது அடுத்தடுத்த லைன் அப்களில் பிஸியாக இருந்து வருகிறார். அதே நேரத்தில் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையும் கமல் மக்கள் நீதிமய்யம் தலைவராக எதிர்கொள்ள இருப்பதால் அதற்கேற்ப சினிமா படப்பிடிப்புகளை திட்டமிட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.





