சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் மக்கள் மேடை என்ற அமைப்பை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். மக்கள் மேடை அமைப்பு சார்பில் பாரத சேவா இணையதள தொடக்க விழா சென்னை சேத்துப்பட்டில் நேற்று நடந்தது. ஸ்ரீ தயா அறக்கட்டளை தலைவர் லதா ரஜினிகாந்த் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள சமூக நலத்திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.
மேலும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் பயன் பெறும் வகையில் மக்கள் மேடை இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த் கூறியதாவது, இந்த மக்கள் சேவை 45 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஒவ்வொரு செங்கல்லாக இந்த அமைப்பை கட்டியுள்ளோம்.
இந்தியாவுக்கு ஒரு புதிய கல்வி முறையை தொடங்கியுள்ளோம். தொடர்ந்து சமூக நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். பல ஆண்டுகளாக நாங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை அதிக அளவிலான மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்திலேயே மக்கள் மேடை இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டுப்பற்று எல்லாவற்றையும் விட பெரியது என்றார்.
காவிரி இணைப்பு திட்டம் தொடர்பாக 2002ம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதில் அளித்த லதா ரஜினிகாந்த் கூறுகையில், இது ஒரு அரசியல் கேள்வி. காவிரி இணைப்பு திட்டம் எந்த நிமிடம் எந்த வேலையில் நடக்கிறதோ அப்போது கண்டிப்பாக ரஜினிகாந்த் அதை செய்வார்.
ரஜினிகாந்த் 100 சதவீதம் எனக்கு ஆதரவு அளிக்கிறார். அவருடைய ஆதரவை விட அவருடைய ஆசீர்வாதம் எங்களுக்கு முக்கியம் என்றும் கூறினார். மக்கள் மேடை இணையதளம் சமூக நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதற்கான தளமாக மட்டுமே இருக்குமா அல்லது பொதுமக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் தளமாகவும் இருக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த லதா ரஜினிகாந்த், இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மக்கள் பிரச்சினை தான் அரசாங்கத்தின் பிரச்சனை. அரசாங்கத்திடம் கொண்டு சேர்க்க வேண்டிய நிலைமை வந்தால் அரசாங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்வோம் என்று அப்போது கூறினார்.





