ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேசன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நாளை கங்குவா படம் ரிலீஸ் ஆக உள்ளது. நாளை காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியுடன் இந்த படம் தமிழ்நாட்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் 38 மொழிகளில் 11500 திரையரங்குகளில் கங்குவா படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் நாளை வெளிவர உள்ள கங்குவா படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி 3வது முறையாக நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வாரம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தர வேண்டிய கடன் தொகையை கங்குவா தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் வழங்கி அந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது.
அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சொத்தாட்சியர் தொடந்த ஒரு வழக்கில் 20 கோடி செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. 3வது வழக்காக பியூயல் டெக்னாலஜி என்ற நிறுவனம் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்து ஒரு வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 1 கோடியே 60 லட்சம் ரூபாய் கோர்ட்டில் டெபாசிட் செய்த பிறகு கங்குவா படத்தை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தங்களிடம் இருந்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வாங்கிய தொகையை 18 சதவீத வட்டியுடன் சேர்த்து மொத்தம் 16 கோடி ரூபாய் கேட்டு பியூயல் டெக்னாலஜி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
அவர்களிடமிருந்து பெற்ற தொகையில் ரூ.5 கோடியை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வழங்கி விட்ட நிலையில், மீதி தரவேண்டிய அசல் தொகையான 1 கோடியே 60 லட்சம் ரூபாயை இன்று டெபாசிட் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கங்குவா படத்துக்கு தடை கோரி இப்படி அடுத்தடுத்து வழக்குகளால் இந்த படத்துக்கு சிக்கல் அதிகரித்து வருகிறது. இன்னும் எத்தனை பேரிடம் தான் இந்த நிறுவனம் கடன் வாங்கி உள்ளது என்று சூர்யா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வின்னர் வடிவேலு காமெடியில் சங்கமே அபராதத்தில் ஓடிட்டு இருக்கு என்றது போல், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனமே கடனில்தான் ஓடுகிறதா என்றும் ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.





