“லியோ” திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்ததில் இருந்தே இத்திரைப்படம் LCUக்குள் வருமா? வராதா? என்பது குறித்த கேள்விகள் ரசிகர்களிடம் இருந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய “விக்ரம்” திரைப்படத்தில் “கைதி” திரைப்படத்தின் ரெஃபரன்ஸ் இருந்தது. ஆதலால் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸுக்குள் “விக்ரம்” திரைப்படம் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

அதன் பின் தன்னுடைய திரைப்படங்கள் இனி LCUக்குள் வருவதாக இருந்தால் அத்திரைப்படத்தின் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். “விக்ரம்” திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இணையவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்ததில் இருந்து “லியோ” திரைப்படம் LCUக்குள் வருமா? வராதா? என்ற சந்தேகத்துடனே ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மேலும் “லியோ” திரைப்படத்தில் “விக்ரம்” படத்தில் விஜய் சேதுபதி ஏற்று நடித்த சந்தனம் கதாப்பாத்திரத்தின் தொடர்ச்சி வருவதாகவும் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி இத்திரைப்படத்தில் நடிப்பதாகவும் கூறி வந்தனர். ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி, தான் இத்திரைப்படத்தில் நடிக்கவில்லை என்பதை தெளிவுப்படுத்தி இருந்தார்.

“விக்ரம்” திரைப்படத்தில் சிறு கதாப்பாத்திரங்களாகவே இருந்தாலும் இரண்டு கதாப்பாத்திரங்கள் மிக புகழ் பெற்ற கதாப்பாத்திரங்களாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. ஒன்று ஏஜெண்ட் டீனா கதாப்பாத்திரம், மற்றொன்று மாயா கிருஷ்ணன் நடித்த கதாப்பாத்திரம். இதில் ஏஜெண்ட் டீனா கதாப்பாத்திரத்தில் டான்ஸ் மாஸ்டர் வசந்தி நடித்திருந்தார்.
இதில் வசந்தி தற்போது “லியோ” திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மாயா கிருஷ்ணனும் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருவதாக தெரிய வருகிறது. இருவரும் இணைந்து ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். அப்புகைப்படத்தை வைரலாக்கி வரும் ரசிகர்கள், “லியோ, LCU உறுதிதான்” என்று கூறி வருகின்றனர்.






