இந்த ஆண்டு இணையத்தில் அதிகம் பேசப்பட்டது, லியோ படம் குறித்த விவகாரமாக தான் இருக்கும். படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே, அது பற்றி ரசிகர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, அவ்வப்போது தயாரிப்பு நிறுவனமும் சில அப்டேட்களை வெளியிட்டு வந்தது.
இருப்பினும் இந்த திரைப்படத்தில் ஆரம்பத்திலிருந்து பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் வருகிறது. முதலில் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்து தயாரிப்பு நிறுவனம் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. பிறகு ட்ரெய்லர் வெளியீட்டின் போது, ரோகினி திரையரங்கத்தின் இருக்கைகளை விஜய் ரசிகர்கள் அடித்து நொறுக்கியது பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்குப் பிறகு, ட்ரெய்லரின் விஜய் பேசிய கெட்ட வார்த்தை சர்ச்சையை கிளப்பியது. அது பற்றி விவாதங்கள் எழ, விஜய் பேசிய டயலாக் மியூட் செய்யப்பட்டது. இதன் பின்னர் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், கடந்த 19ஆம் தேதி லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும். முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி சுமாராக உள்ளது என்றும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. மேலும் எல் சி யு வில் தேவையில்லாமல் இந்த திரைப்படம் திணிக்கப்பட்டு இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்.
இதனிடையே லியோ படத்தின் வசூல் குறித்த விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை வெடித்தது. சில திரையரங்கு உரிமையாளர்கள் இந்த திரைப்படத்தால் லாபம் இல்லை என்று அடித்துக் கூறினர். ஆனால் இதைக் கண்டு கொள்ளாத தயாரிப்பாளர் லலித் குமார், ஒரே வாரத்தில் லியோ திரைப்படம் 461 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவித்தார். இந்த நிலையில் படத்தின் வெற்றி விழாவை, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் ஒன்றாம் தேதி நடத்தப் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இதற்காக பெரிய மேடு காவல் நிலையத்தில் அனுமதி கோரி தயாரிப்பாளர் விண்ணப்பித்திருக்கும் நிலையில் அது தொடர்பான சில கேள்விகளை காவல்துறை எழுப்பியுள்ளது. இதனால் லியோ வெற்றி விழாவிற்கு அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என கேள்வி எழுந்திருக்கும் சூழலில், படத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு பரிசு வழங்க லலித் குமார் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. லியோ என பெயர் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை லலித்குமார் வழங்கப் போகிறாராம். அனேகமாக வெற்றி விழாவில் இது கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஜெயிலர் படத்தின் வெற்றியின்போது அதன் தயாரிப்பு நிறுவனம் ஊழியர்களுக்கு தங்க காயின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.





