“லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஒரு பக்கம் “லியோ” திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸிற்குள் வருமா? வராதா? என்ற பேச்சுக்கள் போய்க்கொண்டிருக்க மறுபக்கம் “லியோ” திரைப்படத்தில் படமாக்கப்பட்ட பிரம்மாண்ட பாடல் காட்சி குறித்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கிட்டத்தட்ட 2000 கல்லூரி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை நடனமாட வைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடியுள்ளாராம். இது விஜய்யின் இன்ட்ரோ பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
“லியோ” திரைப்படத்தில் விஜய் ஒரு கேங்கஸ்டராக வருகிறாராம். மேலும் மிஷ்கின் தான் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக ஒரு விழாவில் அவரே கூறினார். அதே போல் இத்திரைப்படத்தில் நடித்து வரும் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலி கான் ஆகியோர் கேங்கஸ்டர் கதாப்பாத்திரங்களில் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் “லியோ” திரைப்படம் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பு நிறுவனத்தினர் அதிக லாபம் பார்த்துள்ளதாக பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார். ஏற்கனவே “லியோ” திரைப்படத்தின் கேரள உரிமம் இதுவரை விற்கப்படாத அளவில் 16 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
அதனை தொடர்ந்து தற்போது மற்றும் ஒரு சாதனையை குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தனது பேட்டியில் கூறியுள்ளார். அதாவது “லியோ” திரைப்படத்தின் ஓடிடி உரிமம், சேட்டலைட் உரிமம் போன்றவைகள் 450 கோடிகளில் இருந்து 500 கோடிகள் வரை விற்கப்பட்டுள்ளதாம். அதே போல் வெளிநாட்டு உரிமம் 65 கோடிகளுக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

“லியோ” திரைப்படம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த நிலையில் வெளியீட்டிற்கு முன்பே “லியோ” திரைப்படம் அதிகளவில் லாபம் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.





