இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய்க்கு, கடைசியாக வெளிவந்த பீஸ்ட், வாரிசு இரண்டு திரைப்படங்களுமே கலவையான விமர்சனத்தை கொடுத்தது. அதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் விஜய்.
கொரோனா கட்டுப்பாடுகளால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க, ஓடிடி தளத்தில் புது படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இனி திரையரங்களின் பாடு அவ்வளவுதான் என பலரும் கூறிக் கொண்டிருக்க, ரசிகர்களை மீண்டும் அங்கு வரவழைக்க மிகப்பெரிய நட்சத்திரத்தின் ஒரு திரைப்படம் தேவைப்பட்டது.
இந்த நேரத்தில்தான், விஜயின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி திரையரங்கு உரிமையாளர்களின் வயிற்றில் பால் வார்த்தது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தாலும், மாஸ்டர் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நிறைவை கொடுத்தது. இப்படி பலரும் விரும்பிய கூட்டணி தான் தற்போது மீண்டும் இணைந்து இருக்கிறது.
செவன் ஸ்டார் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் இயக்கியிருக்கும் லியோ திரைப்படத்தில், சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். திரைப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் எல் சி யு கான்செப்ட் இந்த படத்திலும் இருப்பதாகவும், விக்ரம் படத்தில் நடித்த முக்கிய நட்சத்திரம் லியோவின் நடித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் போலி டிக்கெட்டுகள் அதிகமாக விற்றதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அதற்கான ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் லியோவில் இருந்து இரண்டாம் பாடல் வெளியானாலும், ட்ரெய்லர் எப்போது ரிலீஸ் செய்யப் போகிறார்கள் என்றே பலரும் கேட்டு வந்தனர். இந்த நிலையில் வரும் ஐந்தாம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர்.





