சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தின் மீது ரசிகர்களின் பார்வை திரும்பியுள்ளது. லியோ படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, அதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதற்கு முக்கிய காரணம், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு. கான்செப்ட்தான். கைதி திரைப்படத்தில் சில முக்கிய கதாபாத்திரங்களை, தனது விக்ரம் படத்தில் கொண்டு வந்த லோகேஷ், இரண்டு படத்திற்கும் பொதுவான போதைப்பொருளை மையமாக வைத்து கதை உருவாக்கி பலரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
முக்கியமாக, விக்ரம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் கைதி கார்த்தியை தொடர்பு படுத்திய விதம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தமிழ் சினிமாவுக்கு புதியதாக இருந்த இந்த கதைக்களம், லியோவிலும் தொடர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால், லோகேஷ் கனகராஜ் செல்லும் இடங்களில் எல்லாம் லியோ எல்.சி.யு.வில் வருகிறதா என கேள்வி எழுப்பி வந்தனர்.
இது ஒரு புறம் இருக்க, லியோவின் படப்பிடிப்பு ஜெட் வேகத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. காஷ்மீரில் தொடங்கி, சென்னை, ஐதராபாத், தலக்கோணம் ஆகிய இடங்களில் சூட்டிங்கை நடத்தி இருக்கிறார் லோகேஷ். இதில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா, மிஷ்கின், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நட்சத்திரங்கள் இருக்க, அதில் சஞ்சய் தத் மற்றும் அர்ஜூனின் கதாபாத்திரத்தை மட்டும் படக்குழு வெளியிட்டது. சஞ்சய் தத் ஆன்டனி தாஸ் எனும் கேரக்டரில் நடிப்பதாகவும், அர்ஜூன் ஹரால்டு தாஸ் எனும் ரோலில் மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. படத்தில் இவர் தாஸ் பிரதர்ஸ் ஆக வருகிறார்களாம். இந்த சகோதர கூட்டணியில் லியோவான விஜய்க்கும் பங்கிருப்பதாக கூறப்படுகிறது.
படம், அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாகும் நிலையில், அதற்கான போஸ்ட் புரொடக்சன் வேலைகளில் லோகேஷ் வட்டாரம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. யு.கே.வில் இப்போதே ப்ரீ புக்கிங் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டிக்கெட் விற்பனையில் புதிய சாதனையை லியோ படைத்திருக்கிறது. இதுபோக சேட்டிலைட், இசை, ஓடிடி உரிமத்திலும் லியோ படம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், லியோவில் ஹிட் அடித்த நா ரெடிதான் பாடலின் சில வரிகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்த பாடல், இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. 2 ஆயிரம் நடனக்கலைஞர்கள் ஆட, விஜய்யின் சொந்த குரலில் இந்த பாடல் உருவானது. ஆனால், புகைப்பிடிக்கும் காட்சிகள், மது அருந்துவது தொடர்பான விஷயங்கள் இதில் இருப்பதால், பாடலுக்கு தணிக்கைக் குழு முட்டுக்கட்டை போட்டுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகும்போது, பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டாவ கொண்டா சியர்ஸ் அடிக்க, பத்த வச்சு புகைய விட்டா பவரு கிக்கு, மில்லி உள்ள போனா போதும் கில்லி வெளிய வருவான்டா வரிகள் நீக்கப்பட இருப்பதாகவும், அதற்கு பதில் வேற வரி இடம் பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாடலின்போது புகைப்பிடிப்பது தொடர்பான எச்சரிக்கை லோகோவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





