சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, நடிகர்களாகி ஹீரோவாக நடித்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராகி விட்டால், அடுத்து அரசியல்தான், நேராக முதலமைச்சர் இருக்கைதான் என்பதுதான் பல நடிகர்களின் கனவாக இருக்கிறது. அந்த கனவில் ஜெயித்தவர்கள் யாரென்று தெரிந்துக்கொள்வோம்.
நடிகராக மக்களின் மனங்களை வென்ற புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 1972ம் ஆண்டில், அண்ணாத்துரை மறைவுக்கு பிறகு துவக்கிய கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தொடர்ந்து 3 முறை, 11 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தார். அமெரிக்காவில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த எம்ஜிஆரை, தமிழக மக்கள் மீண்டும் ஜெயிக்க வைத்து முதலமைச்சர் ஆக்கினார்கள்.
அடுத்து 1989ல் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை துவங்கி தோற்றுப் போனார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கே பாக்யராஜ், எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக்கழகம் கட்சியை ஆரம்பித்து தோற்றுப்போனவர். அடுத்து தாயகம் மறுமலர்ச்சி கழகத்தை துவங்கி தோற்றுப் போனவர் நடிகர் டி. ராஜேந்தர்.
கடந்த 1996ம் ஆண்டில் சமத்துவ மக்கள் கட்சியை துவக்கிய நடிகர் சரத்குமார், தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல் களத்தில் காணப்படுகிறார். நாடாளும் மக்கள் கட்சி துவங்கிய நவரச நாயகன் கார்த்திக்கையும் காணவில்லை. அவரது கட்சியையும் காணவில்லை. நடிகர் கர்ணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியை நடத்தி வருகிறார். அதே போல் நடிகர் மன்சூர் அலிகான் ஜனநாயக புலிகள் என்ற கட்சியை துவங்கினார்.
இதற்கிடையே கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் கட்சியை துவங்கிவிட்டு, திமுகவிடம் சீட் கேட்டு மன்றாடிக் கொண்டு இருக்கிறார் கமல்ஹாசன். நல்ல நடிகராக ஜெயித்தவர், ஒரு அரசியல்வாதியாக தோற்றுப்போய் இருக்கிறார். இப்படி பல நடிகர்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்று மண்ணை கவ்விய நிலையில், 2005ம் ஆண்டில் தேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்க, எம்ஜிஆருக்கு பிறகு தமிழக மக்களிடம் அதிக ஆதரவு, வரவேற்பை பெற்றவர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் மட்டும்தான். அவர்தான் எதிர்கட்சி தலைவராகவும் வெற்றி பெற்றார்.
இதுவரை தமிழக அரசியலில், சினிமாத்துறையில் இருந்து சென்ற 11 பேரில் வெற்றி பெற்றவர்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் ஆகிய இருவர் மட்டுமே. மற்ற 8 பேரும், மண்ணை கவ்விய நிலையில்தான் அரசியலில் இருந்தனர். இப்போதும் இருக்கின்றனர். இதில் 11வது ஆளாக நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகத்தை துவங்கி இருக்கிறார். இவர் 8 பேர் லிஸ்ட்டில் வருவாரா, அல்லது எம்ஜிஆர், விஜயகாந்த் வரிசையில் இணைவாரா என்பதை வரும் தேர்தலில், மக்கள் போடும் ஓட்டுகள் முடிவு செய்யும்.





