செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால். 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது. குறிப்பாக படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. இதற்கு அடுத்த படமாக, சண்டக்கோழியில் நடித்தார் விஷால்.
அவரின் திரை உலக பயணத்தையே திருப்பி போட்ட திரைப்படமாக இது அமைந்தது. லிங்குச்சாமி இயக்கி இருந்த இந்த திரைப்படம், கமர்சியல் படமாகவும் ஆக்சன் படமாகவும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. அதுமட்டுமல்ல தனது இரண்டாவது திரைப்படத்திலேயே ஆக்சன் ஹீரோவாக வளர்ச்சி அடைந்தார் விஷால். இதன் பிறகு அவருக்கு திமிரு தாமிரபரணி என வெற்றி திரைப்படங்கள் வர ஆரம்பித்தன.
ஆனால் இதனை அவர் தொடர்ச்சியாக பின் தொடரவில்லை. மலைக்கோட்டை தோரணை சத்யம் என தொடர்ச்சியாக தோல்வி திரைப்படங்களை கொடுத்த விஷால், தற்போது வரை சினிமாவில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில், 2023 ஆம் ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் குவித்தது.
இப்படியான சூழலில் விஷால் நடித்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மதகஜராஜா திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. 2013 ஆம் ஆண்டு இதன் சூட்டிங்கை முடித்தார்கள். சுந்தர் சி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில், வரலட்சுமி அஞ்சலி பிரகாஷ்ராஜ் சந்தானம் சோனு சூட் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகத் தாமதமாக இந்த திரைப்படம் வந்தாலும், எதிர்பார்ப்பு என்னவோ குறையவே இல்லை.
இந்த திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். படத்திலிருந்து ஒரு பாடலையும் பாடி இருக்கிறார் விஷால். இதற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற சுந்தர் சி இந்த திரைப்படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறியிருந்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷால் பலரையும் அதிர்ச்சி அடைய செய்தார். மெலிந்த உடலுடன், மைக் பிடித்த போது கைகள் நடுங்கிய படியே அவர் பேசிக் கொண்டிருந்தார். இருக்கையில் அமர்ந்திருந்த போதும் அவரது கண்கள் கலங்கின. விஷாலின் இந்தத் தோற்றத்தை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, விஷால் கடுமையான வைரஸ் காய்ச்சலின் போதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதுதான் காரணம் எனக் கூறப்பட்டாலும், விஷால் விரைவாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.





