இயக்குனர் சுதா கொங்கரா இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர். ஆளுமை திறன்மிக்க இயக்குனராக அடையாளமும், அங்கீகாரமும் பெற்றவர். இந்த படங்களுக்கு முன்பே துரோகி என்ற படத்தை அவர் இயக்கி இருக்கிறார். அதில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்த படம்தான் புறநானூறு. இந்தி எதிர்ப்பு போராட்ட களத்தை மையமாக கொண்ட இந்த படத்தில், சில அரசியல் காரணங்களால் நடிகர் சூர்யா நடிக்க மறுத்துவிட்டார். கதையில் மாற்றங்கள், திருத்தங்கள் செய்ய சூர்யா வலியுறுத்தியதால், அந்த படத்தை இயக்க விரும்பாமல், சுதா கொங்கரா வெளியேறி விட்டார்.
இப்போது அதே கதையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இது அவரது 25வது படமாகவும் அமைகிறது. இந்தி எதிர்ப்பு போராட்ட களத்தை மையமாக கொண்ட இந்த படத்தின் கதையை, மதுரை எம்பி சு வெங்கடேசன்தான் எழுதியிருக்கிறார். இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த படத்தில் ஒரு புதிய அறிவிப்பாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்கிறார் என்ற தகவல் நேற்று வெளியானது. லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே, ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் ஒரு காட்சியில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதில் அவர் இயக்குனராகவே படத்தில் வருவார். ஆனால் அது பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை. படமும் சரியாக போகவில்லை.
அதன்பிறகு நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனின் இனிமேல் என்ற இசை ஆல்பத்தில், லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார். இதில் ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் நாயகனாக அவர் நடித்திருந்தார். இது மிகப் பெரிய அளவில் அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்தது. லோகி அண்ணா, என்ன அண்ணா இதெல்லாம் என்று பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது சுதா கொங்கரா இயக்கும் படத்தில், லோகேஷ் கனகராஜ் வில்லன் கேரக்டரில் நடிப்பது உறுதியாகி விட்டது. விக்ரம், கைதி, லியோ போன்ற படங்களில் வில்லன் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. எனவே, வில்லன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் படத்தின் நாயகன் சிவகார்த்திகேனை பந்தாடி விடுவாரா, என்று இப்போதே ரசிகர்கள் ஆவலுடன் பேசத் துவங்கி விட்டனர்.





