நடிகர் ரஜினிகாந்த் தற்போது, கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முதல் கட்டமாக, ஹைதராபாத்தில் நடைபெற்றது. பிறகு, விசாகப்பட்டினத்தில் முழு வீச்சில் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்தன.
அங்கு ஒரு மிகப்பெரிய செட் அமைத்து பணிகளை லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வந்தார். இந்த திரைப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சோபின் சபீர், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சைமன் என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. தங்கக் கடத்தலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. துறைமுகம் தொடர்பான காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க வேட்டையன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளிலும் ரஜினிகாந்த் கவனம் செலுத்தி வந்தார். இதற்கான போட்டோ சூட்டிலும் ரஜினி கலந்து கொண்டார். இந்த நிலையில் நேற்று இரவு ரஜினிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடி வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட வலி மற்றும் லேசான நெஞ்சுவலி காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து அவருக்கு இரவோடு இரவாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் எவ்வித அறுவை சிகிச்சையும் அவருக்கு மேற்கொள்ளப்படவில்லை. அடிவயிற்றுப் பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவருக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது ரஜினிகாந்த் நலமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் விரைவில் நலம் பெற வேண்டி முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர் என் ரவி உள்ளிட்டோர் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.





