ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் தற்போது எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் கூலி. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நட்சத்திரம் அமீர்கான், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சோபின் சாகிர் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இது போக சத்யராஜ், கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இதன் பெரும்பாலான படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. துறைமுகம் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க வேண்டும் என்பதால் அங்கு பிரம்மாண்ட செட் போட்டு எடுத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரீச் ஆகி உள்ளன. அதிலும் குறிப்பாக, பவர் ஹவுஸ் பாடல் பட்டையை கிளப்பியது. படத்தின் வியாபாரமும் நன்றாக நடைபெற்றிருக்கும் சூழலில், விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் கூலி திரைப்படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
அதில், கூலி திரைப்படத்திற்கு முன்பு ரஜினிகாந்துக்கு வேறு ஒரு கதையை நான் தேர்வு செய்து இருந்தேன். அது ஒரு ஃபேண்டஸி திரைப்படம். அதில் ரஜினிகாந்த் சார்தான் வில்லன். கதாநாயகனாக வேறு ஒருவரை வைத்திருந்தேன். ஆனால் அதன் பிரி ப்ரொடக்சன் பணிகளே இரண்டு வருடங்கள் ஆகும் என்பதால், அவரிடம் கூலி கதையை கூறினேன்.
இந்த கதையை சொல்லும்போதே நான் அவரிடம் கமல் சார் ரசிகன் என்று தெரிவித்தேன். அப்போது அவர் ஒன்றும் கூறவில்லை. டப்பிங் பணியின் போது, உதவி இயக்குனரிடம் அவர் கமல் சார் ரசிகரா இசை வெளியீட்டு விழாவில் பார்த்துக் கொள்கிறேன் என்று ரஜினி சார் நகைச்சுவையுடன் பேசி இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் கமல் சார் வருவதாக சொல்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இது, தனித்துவமிக்க திரைப்படமாக இருக்கும். தர்மதுரை திரைப்பட லுக்கில் ரஜினி சாரை கூலியில் காட்ட வேண்டும் என விரும்பினேன். அதில் சாதித்து விட்டேன் என்றும் நினைக்கிறேன் என்று விவரித்துள்ளார்.





