மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை 5 திரைப்படங்கள் மட்டும் வெளியாகி உள்ளன. தற்போது அவர் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படி குறைந்த திரைப்படங்கள் கொடுத்தாலும் அவர் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் டைரக்டராக இருக்கிறார்.
இதற்கு காரணம் அவரது ஆக்ஷன் கதைக்களமும், அதற்குப் பின்னால் இருக்கும் விறுவிறுப்பான திரைக்கதையும் தான். இதனை தனது முதல் திரைப்படமான மாநகரத்திலேயே அட்டகாசமாக வெளிப்படுத்தி இருப்பார் லோகேஷ் கனகராஜ். இருப்பினும் அவருக்கு இரண்டாவது திரைப்படமாக வெளிவந்த கைதிதான் பெரிய திருப்புமுனையை கொடுத்தது.
ஒரே இரவில் நடைபெறும் கதையாக அதனை காட்சிப்படுத்தியிருந்தார் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து விக்ரம் திரைப்படத்தில், கைதி திரைப்படத்தின் கதாபாத்திரங்களை முடிச்சு போட்டு லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் அதாவது எல் சி யு என்பதை அறிமுகம் செய்து ஒட்டுமொத்த தமிழ் திரை உலகையும் அவர் திரும்பி பார்க்க வைத்தார்.
தொடர்ந்து தளபதி விஜய் உடன் இரண்டாவது முறையாக இணைந்த லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தை கொடுத்தார். அதிலும் தனது எல் சி யூ கான்செப்ட்டை காட்டி இருந்தார். இருந்தாலும் அது அந்த அளவுக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு பெறவில்லை. வசூல் ரீதியாக லியோ கொண்டாடப்பட்டது.
லியோ படத்தில் விஜயின் தந்தையாக நடித்திருந்தார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், எனக்கு லியோவில் லோகேஷ் சிறிய கதாபாத்திரம் கொடுத்து விட்டார். இதனால் அவர் மீது எனக்கு கோபம் இருக்கிறது என்று குறிப்பிட்டார். இது குறித்து அண்மையில் பேட்டியளித்த லோகேஷ் கனகராஜிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் கூறிய அவர், இது பற்றி சஞ்சய்தத் என்னிடம் பேசினார். ஜாலியாக பேசிய விஷயங்களை இப்படி வீடியோவில் கட் செய்துள்ளார்கள் என்று கூறினார். நானும் இங்கு மிகப் பெரிய இயக்குனர் அல்ல. அனைத்தையும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். அவரை வைத்து எதிர்காலத்தில் சிறப்பான ஒரு திரைப்படத்தை இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார்.





