தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நட்சத்திர நடிகர்கள் யாரென்றால் முதலில் சூர்யா, 2வது விஷால் 3வது ஜெயம் ரவி என தாராளமாக சொல்லலாம். ஆனால் ரெட்ரோ படமும், ஆர்ஜே பாலாஜி இயக்கும் 45வது படமும் சூர்யாவுக்கு பெரிய வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் காதலிக்க நேரமில்லை, சுதா கொங்கரா இயக்கும் 1965 படமும் ஜெயம் ரவி மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. அதே போல் அடுத்து விஷால் நடிக்க உள்ள இரும்புத்திரை 2ம் பாகம் மற்றும் வால்டர் வெற்றிவேல் ரீமேக் படங்கள் அவருக்கும் பெரிய கம்பேக் ஆக அமைய அதிக வாய்ப்புள்ளது.
பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக இருந்த விடாமுயற்சி படம் தள்ளிப் போனதால், 10 படங்கள் வரை பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மதகஜ ராஜா படமும் பொங்கல் ரிலீஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையமைத்த இந்த படத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த படம் 2013ம் ஆண்டில் ஷூட்டிங் முடிவடைந்தது. 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படம் அந்த நாளில் வெளியாகவில்லை. அப்போது விஷால் நடித்த மற்றொரு படம் சமர் வெளியானதால், மதகஜராஜா படம் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
பிறகு 2013ம் ஆண்டு குடியரசு தினத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டனர். ஆனால் அப்போதும் மதகஜ ராஜா படம் வெளியாகவில்லை. மதகஜராஜா படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்தது. இந்த நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான மணிரத்னம் இயக்கிய கடல் படம் 2013ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி வெளியாகி படுதோல்வி அடைந்தது.
கடல் படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை மதகதராஜா வெளியீட்டின் போது சரி செய்ய வேண்டும் என வினியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பிறகு அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் மதகஜ ராஜா படத்தை வெளியிட திட்டமிட்டனர். ஆனால் தொடர்ந்து வழக்குகள் பிரச்னைகள் என படத்தின் வெளியீடு அவ்வப்போது தள்ளி வைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் படம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மதகதாராஜா படம் இந்த பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.





