இயக்குனர் சுந்தர் சி தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார். அவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களை ரசிக்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஏனெனில் காதல், காமெடி, கவர்ச்சி என ஜனரஞ்சகமான படங்களை தந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் வௌியான அவரது அரண்மனை 4 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த இயக்குனர் சுந்தர் சி, ஒரு கட்டத்தில் நடிகராகவும் மாறிவிட்டார். அவர் நடித்த பல படங்கள் வெற்றியை பெற்றிருக்கின்றன. இப்போது புதிய படம் ஒன்றில் சுந்தர் சி கதாநாயகனாகவும், வடிவேலு காமெடி கேரக்டரிலும் நடித்துள்ளார். தென்காசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 45 நாட்கள் இங்கு தொடர்ந்து ஷூட்டிங் நடத்தப்பட உள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார். மேலும், கேத்தரின் தெரசாவும் இந்த படத்தில் மற்றொரு நாயகியாக நடிக்கிறார். அவர் ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 2 படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில், ரெடின் கிங்ஸ்லியும் காமெடி கேரக்டரில் வடிவேலுவுடன் நடித்து வருகிறார்.
சுந்தர் சி இயக்கத்தில், கடந்த 2012ம் ஆண்டில் இயக்கப்பட்ட படம் மதகஜ ராஜா. இந்த படத்தில் விஷால் கதாநாயகனாகவும் வரலட்சுமி, அஞ்சலி கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் காமெடி நடிகர் சந்தானம் நடித்துள்ளார். ஜெமினி பிலிம்ஸ் தயாரித்த இந்த படம் 11 ஆண்டுகளாக ரிலீசாகாமல் முடங்கி கிடந்தது.
இந்நிலையில் இந்த படத்தை வெளியிட ஜெமினி பிலிம்ஸ் முன்வந்துள்ளது. வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ள அதே நாளில்தான் நடிகர் விஜய் நடித்த தி கோட் படம் ரிலீஸ் ஆகிறது. அதாவது விஜயுடன் விஷால் மோத தயாராகி விட்டார் என்று இந்த படம் வெளியீடு குறித்து வைரலாக பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இப்படி ஒரு பஞ்சாயத்து தங்கலான் படத்துக்கும், அந்தகன் படத்துக்கும் ஏற்பட்டது. சியான் விக்ரம் நடித்த தங்கலான் படமும், பிரசாந்த் நடித்த அந்தகன் படமும் ஒரே நாளில் ஆகஸ்ட் 15 அன்று மோதுகின்றன. இருவரும் நெருங்கிய உறவினர்களாக இருந்தும் போட்டி போடுகின்றனர் என்று தகவல் வைரலான நிலையில், பிரசாந்த் இந்த பிரச்னையே வேண்டாம் என, அந்தகன் படத்தை 9ம் தேதி ரிலீஸ் என அறிவித்துள்ளார். அதே போல் விஷாலும், விஜயுடன் மோதி பலத்த காயமடைய வேண்டாம் என, கடைசி நேரத்தில் முடிவெடுத்து மதகஜ ராஜா படம் ரிலீஸ் தேதியை மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது.





