நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் அமரன். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்துக்கு பராசக்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மொழிப்போர் தியாகி இராசேந்திரன் என்பவரது வாழ்க்கை வரலாறு கதையை சுதா கொங்கரா பராசக்தி படமாக உருவாக்கி வருகிறார். கடந்த 1960-65 ஆண்டுகளில் நடந்த இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது. இலங்கையில் இப்போது ஷூட்டிங் நடந்து வருகிறது.
இலங்கையில் நடந்து வரும் படப்பிடிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்று நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் நடிகை ஸ்ரீலீலா ரவி மோகன் அதர்வா உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இலங்கையில் நிறைய லைவ் லொக்கேஷன் 1965ம் ஆண்டு காலம் போல இருப்பதால், செட் அமைக்காமல் அங்கு தத்ரூபமாக காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் மதராஸி. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்த நிலையில் இன்னும் சில முக்கிய காட்சிகள் மட்டுமே படம்பிடிக்கப்பட உள்ளன.
அதனால் பராசக்தி படப்பிடிப்புக்கு நடுவில் சில தினங்கள் மதராஸி படப்பிடிப்பிலும் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துக்கொள்ள இருக்கிறார். அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் படமாக்கிய பிறகு படத்தின் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் துவங்கப்பட உள்ளன. இந்த படமும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதராஸி படத்தை வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் செய்ய ஏஆர் முருகதாஸ் திட்டமிட்டிருந்த நிலையில், அதே நாளில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படமும், இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் நடித்த வார் 2 படமும் ரிலீஸாகிறது. அதனால் மதராஸி படத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அதற்கு முன்பாக ஜூலை மாதமே இந்த படத்தை ரிலீஸ் செய்ய ஏஆர் முருகதாஸ் உள்ளிட்ட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





