நடிகர் சூர்யாவின் கெரியரில் மிக முக்கிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது “அயன்”. இத்திரைப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார், ஏவிஎம் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது. இத்திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. இன்றளவும் 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

இதில் சூர்யாவும் ஜெகனும் நண்பர்களாக நடித்திருந்தனர். சூர்யா மீது ஜெகன் உண்மையான நட்பை வைத்திருந்தாலும், தனக்கு துரோகம் செய்ததை நினைத்து சூர்யா, ஜெகனின் நட்பை துண்டித்து விடுவார். அதன் பின் வெளிநாட்டு பயணத்தில் ஒரு அசாதாரண சூழலில் ஜெகனை சந்திக்க நேர, அப்போது ஜெகனின் வயிற்றை கிழித்து அதில் இருந்த போதை பொருளை எடுக்க ஒரு கும்பல் முயற்சி செய்வார்கள்.
அதில் ஜெகன் இறந்துவிட, தன் நண்பனை காப்பாற்ற முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருப்பார் சூர்யா. “தேவா, தேவா” என்று ஜெகன், சூர்யாவை அழைப்பது இப்போதும் நண்பர்களுக்குள் ஒரு மீம் மெட்டிரியலாக வலம் வருகிறது. அந்தளவுக்கு இருவரின் கதாபாத்திரங்களும் ரசிக்கப்பட்டன.
இந்த நிலையில் “அயன்” படத்தில் ஜெகன் ஏற்று நடித்த சிட்டி பாபு கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறு ஒரு நடிகர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் இயக்குனராக கே.வி.ஆனந்த், சிட்டி பாபு கதாபாத்திரத்திற்காக முதலில் ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணாவைத்தான் அணுகினாராம்.

ஆனால் அந்த சமயத்தில் ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணாவிற்கு முடிகொட்டும் பிரச்சனை இருந்திருக்கிறது. ஆதலால் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். அதன் பிறகுதான் அந்த கதாபாத்திரத்தில் ஜெகன் நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா நடிக்க மறுத்தபோதே கே.வி.ஆனந்த், ‘ஒரு நல்ல வாய்ப்பை தவறவிடுகிறாய், நீ நிச்சயம் இதுக்கு வருத்தப்படுவ” என்று கூறினாராம்.
கடைசியில் அதே போல்தான் நடந்திருக்கிறது. அதாவது “அயன்” படத்தை பார்த்துவிட்டு “இந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டோமே” என்று கே.வி.ஆனந்திடம் சென்று வருத்தப்பட்டாராம் அவர்.





