அமரன் படத்துக்கு பின் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் மதராஸி. கடந்த 5ம் தேதி வெளியான இந்த படத்தில் முழுநேர ஆக்சன் ஹீரோவாக இந்த படத்தில் எஸ்கே அதிரடி காட்டி ரசிகர்களை அசத்தி இருந்தார். ருக்மணி வசந்த் நாயகியாக அழுத்தமான நடிப்பை தந்திருந்தார். துப்பாக்கி படத்தை போலவே வில்லன் நடிப்பில் வித்யூத் ஜாம்வால் மதராஸி படத்திலும் மிரட்டியிருந்தார்.
தமிழில் தர்பார் இந்தியில் சிக்கந்தர் போன்ற தொடர் தோல்வி படங்களை தந்த இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படம் உருவாகி இருந்ததால் பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் பெரிய நம்பிக்கை, ஆர்வம் இந்த படத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே இல்லை என்பதே கசப்பான உண்மை. அதன் வெளிப்பாடுதான் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் மிகவும் மந்தமான நிலை நீடித்தது.
சூர்யா நடித்த கஜினி விஜய் நடித்த துப்பாக்கி ஆகிய 2 படங்களின் கலவைதான் மதராஸி என்பதை ஏற்கனவே இயக்குனர் ஏஆர் முருகதாஸ் வெளிப்படையாக கூறியிருந்தார். அது உண்மைதான் என்பதை படம் பார்த்த ரசிகர்கள் தெளிவாக புரிந்துக்கொண்டனர். ஏனெனில் அந்த 2 படங்களின் மிக்ஸிங் ஆக தான் படத்தின் கதை திரைக்கதை இருந்தது.
ஆக்சன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அசத்தியிருந்தார் என்றாலும் கதை திரைக்கதையில் பல இடங்களில் லாஜிக் மிஸ்டேக் நிறைந்து காணப்பட்டன. அதை எல்லாம் கடந்து பார்த்தால் இந்த படம் துப்பாக்கியை மட்டுமே மையப்படுத்தி உருவாகி இருந்ததால் துப்பாக்கி 2 என்றே டைட்டில் வைத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் கிண்டலாக விமர்சித்தனர்.
கடந்தாண்டில் தீபாவளிக்கு வெளியான அமரன் படம் ரூ. 325 கோடி வசூல் சாதனை செய்தது. 2024ம் ஆண்டில் வெளியான விஜய் நடித்த தி கோட் 445 கோடி ரூபாய் வசூலித்து முதலிடம் பிடித்த நிலையில், ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் ரூ. 235 கோடி வசூலித்து 3ம் இடம் பிடித்தது. அதனால் அமரன் படம் போலவே மதராஸி பெரிய வசூலை குவிக்கும் என ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் படம் வெளியான நாள் முதல் இதுவரை மதராஸி படம் வசூல் 90 கோடி ரூபாய் மட்டுமே நெருங்கியுள்ளது. அதனால் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் லிஸ்ட்டில் மதராஸி இணையுமா என்பதே சந்தேகம்தான். இது எஸ்கே ரசிகர்களை விரக்தியடைய செய்துள்ளது. மேலும் வருகிற அக்டோபர் 3ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மதராஸி படம் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.





