சமீபத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோ காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை நயன்தாராவுக்கு, அந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் லீகல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதை பார்த்து ஆவேசமடைந்த நயன்தாரா, தனுஷ் குறித்து கடுமையான விமர்சனங்களுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் நடிகர் தனுஷ், 2 ஆண்டுகளாக தங்களது ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட விடாமல் தடுத்ததாகவும், 2 ஆண்டுகள் தாமதத்துக்கு தனுஷ்தான் காரணம் என்றும், கீழ்த்தரமான செயலாக ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருப்பதையும் சுட்டிக்காட்டி இருந்தார்.
ஆனால் அதே நேரத்தில், பல கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்பவர்களுக்கு மத்தியில், அந்த திருமணத்தையே ஆவணப்படமாக எடுத்து பல கோடி ரூபாய் நெட்பிளிக்ஸ் மூலம் சம்பாதிக்கும் நயன்தாராவிடம், தயாரிப்பாளர் தனுஷ், தன்னுடைய படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்த ரூ. 10 கோடி கேட்பதில் என்ன தவறு என்றும் விமர்சனம் எழுந்தது.
நடிகை நயன்தாரா அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் தனுஷூடன் நடித்த பல நடிகைகள், நயன்தாராவுக்கு ஆதரவாக லைக் தெரிவித்திருந்தனர். அவர்களில் பலர் மலையாள நடிகைகள், தனுஷூடன் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நஸ்ரியா, அனுபமா பரமேஸ்வரன், பார்வதி, ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லட்சுமி என பலரும் நயன்தாராவின் அறிக்கைக்கு லைக் போட்டு தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
இதனால், நடிகர் தனுஷூடன் நடித்த நடிகைகள் இப்படி, நயன்தாராவுக்கு ஆதரவாக களம் இறங்கியது, ஆதரவு தெரிவித்தது எல்லாம் தனுஷ் மீதான அதிருப்தியாலும், வெறுப்பாலும்தான். ஏனெனில் அவருடன் நெருங்கி படங்களில் நடித்த அவர்களுக்கும் சில கசப்பான அனுபவங்கள் நேர்ந்திருக்கலாம் என்று விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் இப்போது புதிய தகவலாக, நயன்தாரா தரப்பில் இருந்தே அந்த மலையாள நடிகைகளை தொடர்பு கொண்டு, இந்த அறிக்கைக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டதால்தான் அவர்கள், லைக் தெரிவித்துள்ளனர். தானாக யாரும் தனுஷூக்கு எதிர்ப்பும், நயன்தாராவுக்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை என மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார்.





