தமிழ் சினிமாவில் இப்போது கடந்த சில ஆண்டுகளாக ரி ரிலீஸ் சீசன் தொடர்ந்து வருகிறது. 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்த வெற்றிப் படங்கள் எல்லாம் இப்போது மீண்டும் திரைக்கு வருகின்றன. இதில் சில படங்கள் பெரிய வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்புகின்றன. அதனால் பழைய படங்களின் வருகை தியேட்டர்களில் அதிகரித்துள்ளது.
இந்த வரிசையில் படையப்பா கில்லி சச்சின் கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல படங்கள் ரி ரிலீஸ் ஆன நிலையில் கடந்த 23ம் தேதி இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்த 50வது படம் மங்காத்தா படம் ரி ரிலீஸ் ஆனது. இது அஜீத்குமார் நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை பெற்ற ஒரு படமாகும்.
நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு ஓராண்டாக அவரது அடுத்த படம் திரைக்கு வராத நிலையில் ரி ரிலீஸ் செய்யப்பட்ட மங்காத்தா படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன் போலீஸ் அதிகாரியாக முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
மங்காத்தா படத்தில் நடிகர் அஜீத்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும் அஞ்சலி ராய் லட்சுமி அஞ்சலி ஆண்ட்ரியா மகத் வைபவ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆடாம ஜெயிச்சோமடா போன்ற பாடல்கள் இப்போதும் டிரண்டிங்கில் இருக்கின்றன.
15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த படத்தில் வாலி படத்துக்கு பிறகு மீண்டும் அஜீத்குமார் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். கடந்த 2011ம் ஆண்டில் வெளியான மங்காத்தா படம் இப்போது மீண்டும் தியேட்டர்களில் ரி ரிலீஸ் ஆன நிலையில் கடந்த 9 நாட்களாக இந்த படம் ரசிகர்களின் பெரிய ஆதரவுடன் திரையரங்குகளில் ஓடி வருகிறது.
நேற்று 31ம் தேதி வரை கடந்த 9 நாட்களில் மங்காத்தா படம் மொத்தம் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அமோகமாக இருப்பதால் வரும் நாட்களில் இன்னும் கணிசமான வசூல் இருக்கும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ரி ரிலீஸ் படங்களில் மங்காத்தா வசூலில் பட்டையை கிளப்பியுள்ளது.





